லிபியாவில்
கடாபியை வீதியில் இழுத்துச் சென்று சுட்டுக்கொன்று பழிவாங்கியதைப் போல,
தன்னைப் பழிவாங்குவதற்கு சிறிலங்கா மக்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள்
என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி, போகம்பறை மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற, கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜெனிவா
தீர்மானத்தை அடுத்து சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விளக்கி, பொதுமக்களின்
ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக 'ஒன்றிணைந்த நாடு' என்ற பெயரில் நாடெங்கும்
மாவட்ட ரீதியாக பொதுக்கூட்டங்களை சிறிலங்கா அரசு ஒழுங்கு செய்துள்ளது.
சிறிலங்கா அதிபரின் தலைமையில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தொடரின், முதலாவது கூட்டம் நேற்று கண்டியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்,
"ஏகாதிபத்தியவாதிகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறிலங்காவைக் கைப்பற்ற முயற்சித்தனர்.
ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்கிலேயர் என்று பலர் பலமுறை முயற்சிகளை மேற்கொண்ட போதும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சில பிரதானிகள் அன்றைய அரசருக்கு எதிராக செயற்பட்டு ஆங்கிலேயரிடம் நாட்டை காட்டிக் கொடுத்ததால், அவர்களால் எம்மை ஆள முடிந்தது.
ஏகாதிபத்தியவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகவே இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.
அரசசார்பற்ற
நிறுவனம் என்று கூறிக் கொள்ளும் சில அமைப்புகளும், கனவுலகில் மிதக்கும்
சில அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றன.
அவர்களுக்கு
நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நாட்டின் அதிகாரத்தை
கைப்பற்றுவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் கட்சியின் அதிகாரத்தை
கைப்பற்றுங்கள், அதற்கு பின் நாட்டை பற்றி சிந்திக்கலாம்.
இவர்களின்
பொய்ப் பரப்புரைகளில் ஏமாந்து விடாமல், நாட்டின் பாதுகாப்புக்காக அனைவரும்
ஒன்றிணைய வேண்டும்." என்று அவர் மேலும் கூறியுள்ளார். |
No comments:
Post a Comment