Thursday, April 26, 2012

ஈழத் தமிழர் மீது மே 2009 நடத்திய படுகொலைகளின் 3ஆம் ஆண்டு நிறைவில் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் சந்திப்புடன் வெளியிடப்பட்டது சனல் 4 ஆவணக் காணொளி


seithy.com gallery news நேற்றுக் காலை 11:00 மணிக்குக் கனடியத் தமிழர் பேரவையால் கனடியப் பாராளுமன்ற ஊடகவியலாளர் சந்திப்பு வளாகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பல தேசிய ஊடகங்கள் கலந்து கொண்டன. கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர் செல்வி வாணி செல்வராசா அறிக்கை ஒன்றை வாசித்தார். 'சிறி லங்காவில் தொடந்தும் தமிழர் மீது வன்முறைகள் இடம்பெறுகின்றன.
தமிழ் மக்கள் இன்றும் இராணுவ அச்சுறுத்தலில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர். கடத்தல் மற்றும் காணாமற் போதல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.' போன்ற விடயங்கள் இவ்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அத்தோடு தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வைக் காலந்தாழ்த்தாது சிறி லங்கா முன்வைக்க கனடிய அரசு அழுத்தங் கொடுக்க வேண்டும் என இவ்வறிக்கையிற் சுட்டிக்காட்டப்பட்டது.

என்டிபி கட்சியின் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் மற்றும் லிபரல் கட்சியின் மார்கம் யூனியன்வில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் யோன் மக்கலம் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்விற் கலந்து கொண்ட ஊடகவியலாளருக்கு 'சிறி லங்காவின் கொலைக்களம் 2' காணொளிப் பிரதிகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு கனடியப் பாராளுமன்றக் காட்சியறையில் சனல் 4 ஆவணக் காணொளி 'சிறி லங்காவின் கொலைக்களம் 2' திரையிடப்பட்டது. லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி யூடி செரகோ, என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கிறெக் இசுகொட் மற்றும் கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பற்றிக் பிறவுண் ஆகியோர் நிகழ்வைத் தொடக்க உரையுடன் ஆரம்பித்து வைத்தனர். மூன்று கட்சிகளையும் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினரும் பாரளுமன்ற உறுப்பினரின் முதன்மைப் பணியாளர் பலரும் கலந்து கொண்டனர்.
மிக அமைதியாவும் இறுக்கமாகவும் கழிந்த காணொளி நிகழ்வின்; இறுதியில் பலரும் வேதனை கலந்த உணர்வோடு காணப்பட்டனர். கனடிய அரசானது சிறி லங்கா அரசுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடு;க்க வேண்டும், இது ஒரு மனித உரிமை தொடர்பான பிரச்சினை என்பதால் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும், இது போன்ற சந்திப்புகள் தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என்பனவே நிகழ்விற் கலந்து கொண்டோரின் பொதுவான கருத்தாக அமைந்திருந்தது.
சிறி லங்காவின் கனடாவுக்கான தூதுவர் தனிப்பட்ட முறையில் இந் நிகழ்விற் கலந்து கொள்ள வேண்டாம் என அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தும் அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவுடனும் பங்கேற்றலுடனும் இந் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.source:seithy.com

No comments:

Post a Comment