.முதலமைச்சர் ஜெயலலிதா தனது கட்சியின் எம்பி ரபி பெர்னார்டை, இலங்கை வர உள்ள இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவிலிருந்து விலக்கி கொண்டுள்ளார். இந்திய எம்பீக்கள் முழுக்க, முழுக்க இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டு மாத்திரம் செயல்படுவார்கள் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசு கட்டிவருவதாக சொல்லப்படும் வீடுகளை பற்றியும், ஐந்து ஆண்டுகளாக ஹட்டன் டிக்கோயாவில் கட்டும் மருத்துவமனை பற்றியும் ஆராய்வதுதான் அவர்களது நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த அடிப்படையில், இதற்காகத்தான் இந்திய நாடாளுமன்ற குழு இலங்கை வருகிறது என்றால், அதைவிட அவர்கள் வராமலேயே இருக்கலாம். இந்த அடிப்படையில் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவு சரியானது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது:
கடந்த முறை இலங்கை வந்த இந்திய நாடாளுமன்ற தமிழ்நாட்டு எம்பீகளின் தூதுக்குழுவிற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவரின் மகள் கனிமொழி எம்பி அதிகாரபூர்வமற்ற தலைவராக செயல்பட்டார். இலங்கை விஜயம் தொடர்பில் பல அபத்தமான கருத்துகளை அவர் இலங்கையிலும், பிறகு இந்தியாவிலும் வெளியிட்டார்.
தூதுக்குழுவில் வவுனியாவிற்கு சென்றிருந்த கனிமொழி எம்பி, முகாம்களை பார்வையிட்டபின் வெளியே வந்து அங்கே தமிழ் அகதிகள் சிறப்பாக நடத்தப்படுகிறார்கள் என்ற கருத்துப்பட பேசியிருந்தார். பிறகு மலையகத்திற்கும் சென்று வந்தார். அப்போதைய இலங்கை தமிழ் நாளேடுகளிலும் வெளியான அவரது கருத்துகள் இலங்கை ஆட்சியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
அதன்பிறகு கொழும்பில் இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது எனக்கும் அவருக்கும் இது தொடர்பில் ஏறக்குறைய வாக்குவாதம் ஏற்பட்டது. தான் சொல்லாத கருத்துகளை இலங்கை தமிழ் பத்திரிக்கைகள் எழுதி உள்ளதாக அவர் அப்போது இலங்கை தமிழ் ஊடகங்களை குறை சொன்னார். எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தலையிட்டு சமாதான படுத்த வேண்டி ஏற்பட்டது.
இன்று கோரமான போர் முடிந்து, பல ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டு, இன்று உலகம் விழித்துக்கொண்ட நிலையில் ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் இந்திய அரசு முதலில் பல திருத்தங்களை செய்துவிட்டு, பிறகு தவிர்க்கவொண்ணா நிலையில் ஆதரித்து வாக்களித்தது.
இதனால் இன்று இலங்கை அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பை சமாளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மாத்திரம், இந்திய நாடாளுமன்ற குழுவினர் கருத்து தெரிவிக்க கூடாது. வட-கிழக்கிலும், மலையகத்திலும் வாழும் தமிழர்களின் நல்வாழ்வை விலைபேசி விற்று அதன்மூலம் இந்திய-இலங்கை அரசுகளின் இடையிலான உறவு கடந்த காலங்களில் வளர்க்கப்பட்டது. அந்த கொள்கை கைவிடப்பட வேண்டும். இதை இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கு இலங்கையின் இந்திய தூதுவர் சொல்லி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment