Friday, April 20, 2012

தமிழர்களின் உண்மைநிலை அறிய இலங்கைக்கு சர்வதேச குழு அனுப்பிவைக்கப்பட வேண்டும்!- சீமான்


தமிழர்களின் உண்மையான நிலையை அறிந்து அவர்களுக்கு மறுவாழ்வை பெற்றுக்கொடுக்க இலங்கையில் போர் நடந்த பகுதிகளுக்கு மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட சர்வதேசக் குழுவை ஐக்கிய நாடுகள் மன்றம் அனுப்பிவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,




இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறியச்சென்ற பாராளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை புயல் வேகத்தில் பயணம் செய்து ஆங்காங்கே வாழும் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பாக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெவித்துள்ளது வியப்பளிக்கிறது.
வன்னி முகாம்களில் இன்னமும் இருக்கின்ற தமிழர்களிடம் பாராளுமன்றக் குழுவினர் பேசிய போது, அவர்கள் ஒருவித அச்சத்துடனேயே தங்களிடம் பேசியதாக தமிழ்நாட்டில் இருந்து சென்ற இரு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.தங்களோடு பேசிய அம்மக்களின் கண்களில் அச்சம் தெரிந்தது என்று மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.முல்லைத்தீவில் மக்களிடம் பேசிய போது அங்கு ஏராளமான இராணுவத்தினரும், சாதாரண உடையில் உளவுப்பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்று பல நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
ஆனால், இராணுவத்தின் கெடுபிடி ஏதும் இருப்பதாக எந்தத் தமிழரும் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.எனவே, இந்திய பாராளுமன்றக் குழுவின் பயணம் எந்தவிதத்திலும் பயனளிக்காது என்று கூறப்பட்ட கருத்துக்கள் உண்மையாகியுள்ளன.இப்படிப்பட்ட குழுவின் பயணத்தால் துயரத்திலும், அவலத்திலும் வாழும் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.மேம்போக்காக ஒரு பயணத்தை மேற்கொண்டு இந்தக்குழு அளிக்கும் அறிக்கை, உண்மையை மறைப்பதாகவும், இலங்கை அரசைக் காப்பதாகவுமே இருக்கும் என்பதற்கு சுஷ்மா சுவராஜ் தெவித்துள்ள கருத்துக்களே சான்றாகும்.
இந்நிலையில், இலங்கையில் போர் நடந்த பகுதிகளுக்கு மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட சர்வதேசக் குழுவை ஐக்கிய நாடுகள் மன்றம் அனுப்பி வைக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இவ் விடயம் 20. 04. 2012, (வெள்ளி), தமிழீழ நேரம் 8:05க்கு பதிவு செய்யப்பட்டது

No comments:

Post a Comment