சென்னை, ஏப்.27-
முல்லைப்
பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்து வருவதாக வைகோ குற்றம்
சாட்டியுள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்
தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கர் விவசாயிகளின் பாசனத்திற்கும், 85 லட்சம்
மக்களின் குடி நீருக்கும் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணையை,
எவ்விதத்திலும் உடைத்து விடுவது என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல்
கட்சிகளும் திட்டமிட்டு, பல வழிகளில் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கிடையில்,
அணையின் வலு குறித்து ஆய்வு செய்வதற்கு, பிரதான அணையில் நவீன கருவிகளைக்
கொண்டு, 7 துளைகளைக் குடைந்தனர்.
130 அடி ஆழம்
முதல், மையப்பகுதியில் 190 அடிகள் வரையிலும், 6 அங்குல விட்டத்தில்,
செங்குத்தாக இந்தத் துளைகள் குடையப்பட்டன. ஒரு துளையில் கருவி
சிக்கிக்கொண்டதால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அதை அப்படியே
விட்டுவிட்டார்கள். வெளியில் எடுத்து, குழியை மூடவில்லை அனைத்து சோதனைகளும்
முடிந்த பின்னர், துளைகளை மூடுவதற்கு தமிழகப் பொறியாளர்கள் முயன்றபோது,
கேரளப் பொறியாளர்களும், அதிகாரிகளும், காவல்துறையினரும் மிரட்டி
அச்சுறுத்தி தடுத்து விட்டார்கள்.
இந்த ஆழமான
துளைகளில் தண்ணீர் தேங்குமானால், அதில் இருந்து தண்ணீர் வடிவதற்கும்,
பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக, அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள்
அஞ்சுகிறார்கள். அணையைப் பராமரிக்கின்ற முழு உரிமையும், அதிகாரமும், தமிழக
அரசுக்கு தான் உண்டு. நமக்கு உரிமை உள்ள பென்னி குயிக் கட்டிய அணையில்
ஆழமான துளையைப் போட்டு அணைக்கட்டின் கலவையை மாதிரி எடுத்தபிறகு, துளைகள்
உடனடியாக மூடப்பட வேண்டும்.
பிரதான அணையில் ஏழு
துளைகளும், பேபி அணையில் ஒரு துளையும் குடையப்பட்டன. நமக்கு உரிமை உள்ள
அணையை உடைப்பதற்கு, கேரள மாநில அரசின் வரவு செலவு திட்டத்திலேயே 50 கோடி
ரூபாயை ஒதுக்கியதோடு, புதிய அணை கட்ட 668 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான
திட்ட அறிக்கையையும், நீதிபதி ஆனந்த் குழுவினரிடம் தந்ததோடு, மத்திய
நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலிடமும் ஒப்புதல் பெற கொடுத்து
உள்ளது.
புதிய அணைக்கான ஆய்வுக்கு அனுமதி
கொடுத்ததே, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்த பச்சை துரோகம் ஆகும். அணையை
உடைக்கின்ற நடவடிக்கைகளில், கேரளத்தினர் ஈடுபட்டதால்தான், தமிழகம்
கொந்தளித்து எழுந்தது, பொருளாதார முற்றுகை போராட்டம் நடந்தது. நரி
தந்திரத்தோடு கேரளம் தற்போது பதுங்கி இருக்கிறது. அணையை உடைப்பதற்காக
வெடிமருந்தையும் கேரளத்தினர் ஆயத்தமாக வைத்து உள்ளனர்.
நமது
அணையில் உள்ள துளைகளை மூடாவிட்டால், சதித்திட்டம் செய்து, இத்துளைகளையே
பயன்படுத்தி, கேரளத்தினர் அணையை உடைக்கவும் கூடும். அப்படி ஒரு பெரும்
ஆபத்து ஏற்பட்டுவிட்டால், தென்தமிழ்நாடு, தாங்க முடியாத துன்பத்துக்கும்
துயரத்துக்கும் உள்ளாக நேரும். பாலை நிலமாகி, பஞ்சமும், பட்டினியும் வாட்டி
வதைக்கும் அபாயம் ஏற்படும். வருமுன் காப்பதுதான் அறிவுடைமை ஆகும்.
எனவே,
முல்லைப்பெரியாறு அணையில் குடைந்த துளைகளை, உடனடியாக மூடுவதற்கு, தமிழக
அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைத் தடுப்பதற்கு முனையும் கேரள அரசை
மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
source:malaimalar
No comments:
Post a Comment