சர்வதேசத்தின் பார்வை தற்போது சிறீலங்காவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இனவாத சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீகத்தின் மீதே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. சாகையிலும் தமிழ் உயிர் குடித்துச் சாவேன் என்ற நிலையிலேயே சிங்களம் தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், வடபகுதியில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள், தெய்வ வாகனங்கள் தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டமை தொடர்பாக பல தடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் நான்கு இந்து ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டு ஆலயங்களில் வாகனங்களின் தலைகள் அறுக்கப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளன. கோப்பாய் வடக்கு பிரான்பற்று இலுப்பையடி பிள்ளையார் ஆலயத்தின் சுவாமிகாவும் வாகனங்களின் தலைகள், ஆயுதங்கள் பயன்படுத்தி அறுக்கப்பட்டு திருடிச்செல்லப்பட்டுள்ளன.
மேற்படி ஆலயத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வழமையாக வாகனசாலையில் வைத்து பூட்டப்பட்டிருக்கும். ஆயினும் அடிக்கடி வாகன சாலை திறக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்தவாரம் மேற்படி ஆலயத்தின் வாகன சாலையைத் திறந்து வாகனங்களைத் துப்புரவுசெய்ய முற்பட்ட போது அங்கிருந்த வாகனங்களின் தலைகள் அறுக்கப்பட்டுகாணப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்களில் இருந்து அறுக்கப்பட்ட தலையின் எச்சங்கள் எவையும் அங்கு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதேபோன்ற ஒரு திருட்டுச் சம்பவம் யாழ் அச்செழுப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியிலுள்ள கௌத்தந்துறைப் பிள்ளையார் ஆலயத்தின் கதவினை உடைத்து ஐம்பொன்னினாலான மிகப்பெறுமதியான பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை பூஜையை முடித்துக் கொண்டு ஆலயத்தினைப் பூட்டிவிட்டு மீண்டும் மதியப் பூஜைக்காக 11மணியளவில் ஆலயத்திற்கு வந்த குருக்கள் ஆலயக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்துள்ளார்.
கதவு உடைக்கப்பட்டது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குச் சென்று பார்த்த போது ஆலயத்தின் எழுந்தருளி விக்கிரகமான ஐம்பொன்னினாலான மிகப் பழைமை வாய்ந்ததும், பெறுமதியானதுமான பிள்ளையார் விக்கிரகம் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேற்படி ஆலயம் கடந்த போரின்போது மிக மோசமாக அழிவடைந்து இருந்த நிலையில் அண்மையில் ஊர் மக்களின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், புலோலி வடக்கு முச்சந்தி ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயத்தின் கலசங்கள் இரண்டு திருடப்பட்ட சம்பவமும் கடந்த வார முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கலசங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
கடந்த 2011 டிசெம்பர் 20 ஆம் நாளும் மேற்படி ஆலயத்தின் கூரையை பிரித்து ஆலயத்தினுள் உள்நுழைந்த திருடர்களால், லட்சம் ரூபா பெறுமதியான ஆலயப் பொருட்கள் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஆலய உடமைகள், விக்கிரகங்கள், வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளமையும் சிறீலங்காப் படையினரின் காவலரண்கள் வீதிக்கு வீதி இருந்தும் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
யாழில் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறித்து ஆலய நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் பல இந்து ஆலயங்களை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் ஆலய சுற்றாடல்களையும் படையினர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதுடன், ஆலய நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருவதாக ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறே, கிளிநொச்சி கனகாம்பிகை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மன் வீதி உலாவருவதற்கு படையினர் தடை விதித்துள்ளனர். நீர் பாயும் இடங்களின் ஊடாக அம்மன் உலாச் செல்லுவது வழக்கம் என்றும் அழகர் வீதி எனப்படும் குளக்கட்டின் வழியாகச் சென்று கோயிலை அடைவதே மரபு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் அம்மன் இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு வாயிலாக உலா வந்தபொழுது படையினர் அம்மனைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் திருவையாறு வழியாக அம்மன் கோயிலைச் சென்றடைந்தார். கடந்த இரண்டு வருடங்களின் முன்பாக அப்பகுதியில் மீள்குடியேற்றம் நடந்த பொழுதும் இரணைமடுக்குளத்தை தளமாகக் கொண்ட படையினரின் முகாங்கள் அகற்றப்படாதுள்ளன. படையினரின் இந்த முகாங்கள் ஆலயத்தின் வெளிவீதியிலும் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கனகாம்பிகைக் குளத்திற்கு மேற்காக உள்ள சாந்தபுரப்பகுதிகளில் படையினர் பாரிய முகாம்களை அமைத்து ஆயுத களஞ்சியங்களை அமைத்து சிங்கள மக்களின் பார்வைக்காக விட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் கனகாம்பிகை கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பகுதி ஊடாககுளத்தின் கரைக்கு கால் நடைமேய்ப்பதற்கும் மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கையில் மக்கள் ஈடுபடமுடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளனர் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் அம்மனுக்கு கும்பாபிசேகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறீலங்காப்படையினர் அம்மனின் வீதி உலா வைத்தடுத்து நிறுத்தியதாக பக்தர்கள் விசனம் தெரிவித்தார்கள்.
இரணைமடுக்குளத்தின் மூலையில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் திருப்பி அனுப்பப்பட்ட அணைக்கட்டின் வழியாக பெருமளவு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு படையினர் அனுமதித்து வருகின்றமை மக்களை மேலும் விசனமடையவைத்துள்ளது.
இவ்வாறே, தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு வரும் புத்தபெருமான் கடந்தவாரம் குருநகர்ப் பகுதியையும் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்புப் பணிகளில் சிறிலங்காப் படையினரே முழு மூச்சில் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அப்பகுதிப் பொதுமக்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் யாழ்.கடற்கரை வீதி, குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையன்றை அமைக்கும் பணியில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த காலங்களில் பாரியளவு கடற்படை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரமளவில் குறித்த காவலரண் அகற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியை மக்களுக்கு விடுவிப்பதற்காகவே காவலரண் அகற்றப்பட்டுள்ளதாக மக்கள் நம்பியிருந்தனர். எனினும் அந்த இடத்தில் புத்தர் சிலையன்றை அமைக்கும் பணியை படையினர் ஆரம்பித்துள்ளனர். புதிய புத்தர் சிலையின் மூலம் யாழ்.கோட்டைக்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை மக்களைக் கவரமுடியும் எனப் படையினர் சிலர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதேவேளை யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் சிலை அமைப்பது தொடர்பில் சபையிடம் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என யாழ். மாநகரசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் தென்னிலங்கையர்களின் எண்ணிக்கையினைத் தொடர்ந்து, இனந்தெரியாத பல நபர்கள் நடமாடித்திரிகின்றார்கள் எனவும் இவர்கள் யார் என்று இனம்கண்டுகொள்ளமுடியாத நிலைகாணப்படுவதாகவும் யாழ்.தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை எல்லாம் சிங்களம் வேடிக்கையாகவே எண்ணுகின்றது. எமது பூர்வீகம் அழிவதை நாமும் வேடிக்கை பார்ப்போமாயின் நாம் தமிழர்களே அல்ல. அனைத்துலகும் பரந்து வாழ் தமிழ் உறவுகளே. சிங்களத்தால் எமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு சர்வதேசத்தை நோக்கி ஒருமித்து குரல் கொடுப்போம். நாம் சிந்திக்கும் நேரமல்ல சிந்தித்து செயற்படும் நேரம்.
நன்றி : ஈழமுரசு
No comments:
Post a Comment