Friday, April 27, 2012

தமிழக முதல்வரின் பார்வை எங்கள் மீதும் அவசியம் வரும்..! அப்போது மொத்தமாக நாங்கள் விடுதலையடைவோம்: முழு நம்பிக்கையோடு செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள்.


12 முறை நாங்கள் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக உண்ணாநிலையை மேற்கொண்டோம், எவ்வித பயனுமில்லை. 45 நாட்கள் அமைதியாக இருங்கள், அரசிடமிருந்து சாதகமான பதில் வரும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். காத்திருந்தோம். பயனில்லை. இதற்கு பின்னரே இம்முறை உண்ணாநிலையை மேற்கொள்ள தீர்மானித்தோம்.
இன்று 10 நாட்கள் கடந்து விட்டது. எமது தோழர்கள் மூவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். 55 வயதான தோழர் எச்சில் கூட விழுங்காமல் நேற்று முதல் உண்ணாநிலையை தொடங்கியுள்ளார். இவ்வளவுக்கு பிறகும் உறுதியோடு உள்ளோம். எமக்காக எமது உலகு முழுக்க உள்ள தமிழ் மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி முரசொலி கேள்வி பதிலில், தான் முதல்வராய் இருந்த போது மாத, மாதம், குழு, குழுவாக விடுதலை செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
மதிமுகவின் பொறுப்பாளர் மல்லை சத்தியா செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு வெளிவந்து, ஆர்ப்பாட்டம் நடத்தினார். மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எங்களுக்கான ஆதரவு அறிக்கை கொடுத்துள்ளார். நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் முதல்வரின் கவனத்திற்கு எங்களது போராட்டத்தின் ஞாயத்தை அறிக்கையாக விடுத்துள்ளார்.
தமிழக மக்கள் உரிமைக் கழகம் நாளை சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டதை நடத்த உள்ளனர். இப்படி எமது தமிழினம் எமக்காக குரல் கொடுக்கிறது.
முள்ளிவாயிக்கால் மொத்தமாக எமது மக்களை விழுகியபோது, அதற்காக உலக நாடுகள் குரல் கொடுக்கின்றன. தமிழக முதல்வர் அதற்காக தொடர்ந்து சட்ட மன்றத்திலும், இந்திய அரசையும் செவி சாய்க்க வைத்துள்ளார். எமது மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வரின் பார்வை எங்கள் மீதும் அவசியம் வரும் அப்போது மொத்தமாக நாங்கள் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கை இங்குள்ள எமக்கு உள்ளது.

No comments:

Post a Comment