Sunday, May 20, 2012

பீரிசுடன் ஹிலாரி மூடிய அறைக்குள் 35 நிமிடங்கள் பேச்சு (காணொளி இணைப்பு)

hillary-periesபரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்றது. 
நேற்றுக்காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பின் தொடக்கத்தில் ஹிலாரி கிளின்ரனும், ஜி.எல்.பீரிசும் செய்தியாளர்களிடம் உரையாற்றினர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை வரவேற்றுப் பேசிய ஹிலாரி கிளின்ரன், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று உறுதியளித்தார்.


“இரு நாடுகளுக்கும் இடையில் பலமானதும் முக்கியமானமான நெருக்கம் உள்ளது.
நீண்டதும் இரத்தம் தோய்ந்ததுமான ஆயுத மோதல்களை அடுத்து – தனது எல்லா மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை சிறிலங்கா நிறைவேற்றுவதற்கு நாம் ஊக்கமளிக்கிறோம்.
இதற்கான பணிகளுக்கு நாம் பங்காளியாக இருக்க விரும்புகிறோம்“ என்று சுருக்கமாக உரையாற்றினார்.
இதையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உரையாற்றினார்.
இதன் போது பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வு காண்பது என்ற சிறிலங்காவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
சுமார் 10 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தப் பகிரங்க சந்திப்பை அடுத்து மூடப்பட்ட அறைக்குள் சந்திப்பு ஆரம்பமானது.
இந்தச் சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் வரை இடம்பெற்றது.
இதன் போது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை ஹிலாரியிடம் பீரிஸ் வழங்கியுள்ளார்.
நேற்றுக்காலை 11 மணியளவில் அதிபர் ஒபாமாவுடன் இணைந்து புதிய பிரெஞ்சு அதிபரை சந்திக்க வேண்டியிருந்தால், பீரிசுடனான சந்திப்பை அவசரமாக முடித்துக் கொண்டு ஹிலாரி கிளின்ரன் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரீஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினர் அமெரிக்காவின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் வர்த்தக அதிகாரிகள் பலரையும் சந்தித்துள்ளனர்.
அதிபர் ஒபாமாவின் சிறப்பு உதவியாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் பலதரப்பு விவகாரங்கள் தொடர்பான மூத்த பணிப்பாளருமான சமந்தா பவர், உள்ளிட்ட பலருடன் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment