Sunday, May 20, 2012

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு சுவிசில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!


swiss“பிரிந்து போக உரிமை உள்ள தமிழர் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டும்;„. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் நாளை நினைவு கூர்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழின அழிப்பு நாள் சிவந்த மே18 ஜெனீவா ஐ.நா. முன்றலில் முருகதாசன் திடலில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றல் தேசியக்கொடியேற்றல் ஈகச்சுடரேற்றல் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

திடலில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கல் சமாதி முன்பாக நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் கவிதாஞ்சலி சியோன் நகர சிறார்களின் நாட்டியம் உரைகள் ஆகியவை இடம்பெற்றன.
தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கவிஞரும் ஆய்வாளருமான மீனா கந்தசாமி உரையாற்றுகையில் “தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வெளியே இருந்து யாராவது வந்து நடாத்துவார்கள் என நினைக்கக் கூடாது. தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் விடயத்தில் தமிழ் மக்கள் தாமாகவே முயற்சிக்க வேண்டும். அதேவேளை போராட்டம் முடிந்து விட்டது என்ற முடிவிற்கும் யாரும் வந்து விடக் கூடாது. அது தொடரும் என நினைத்து முயற்சிக்க வேண்டும் ;„ என்றார்.
சுவிஸ் ஈழத் தமிழரவையின் பேர்ண் மாநிலப் பிரதிநிதி அன்னா அனோர் தனதுரையில் “தமிழ் மக்கள் தமது சுய அடையாளத்தை எக் காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது. தமது பிள்ளைகளுக்குத் தாய் மொழியைக் கற்பி;ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணர்வுபூர்வமாகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் இந்த நாளில் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்„ என்றார்.
இதேவேளை தமிழருடைய விடுதலைப் போராட்டம் தற்போது போன்று மந்தமாக நகருமாக இருந்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழர்களின் விடுதலைப்பேராட்டம் பற்றிய கதையே இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் மே-17 இயக்கத்தின் சார்பில் கிருஸ்ணகுமார் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழவின் சார்பில் சிவலோகநாதன் ஆகியோரும் உரையாற்றினர்.
ஊடகவியலாளர் கனகரவி உரையாற்றுகையில் மே இல் தமிழினத்தை சிங்களப்பேரினவாதம் உச்சக்கட்ட அழிவுக்கு உட்படுத்தியது. இந்த நாளை தமிழர் மறந்துவிடலாமா? இங்கு வருகை தந்திருக்கக் கூடியவர்கள் குறைவானவர்களாகவே இருக்கின்றீர்கள் ஏன் இந்த நிலமை இதனை மாற்றி அமைக்கும் பொறுப்பு சுவிஸ் வாழ் தமிழருக்கு உண்டு. எனக் கூறியவர் தெடர்ந்தும் உரையாற்றுகையில் “பிரிந்து போக உரிமை உள்ள தமிழர் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டும்;„ என்று வலியுறுத்தினார்.
சுவிஸ் ஈழத் தமிழரவையின் கிளாரஸ் மாநிலப் பிரதிநிதி பேர்ண்னார்ட் தலைமையில் நடைபெற்ற சமகால அரசியல் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தமை குறிப்பிடத் தக்கது.
இத்துடன் தமிழீழத்தேசியக்கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை பாடி தாரக மந்திரத்தையும் கூறி நிகழ்வை நிறைவு செய்தனர்.


No comments:

Post a Comment