Friday, May 04, 2012

இன்று உலக ஊடக சுதந்திர நாள் – கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் விவகாரத்தை கையிலெடுக்கிறது அமெரிக்கா

கடத்தப்பட்டு காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் குறித்து அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தமது பார்வையின் ஒரு பகுதியாக எக்னெலிகொட விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஊடகத்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா முதன்மைப்படுத்தவுள்ளது.

உலக ஊடக சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையிலேயே சிறிலங்காவில் ஊடகத்துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அமெரிக்கா முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட தொடர்பான வழக்கில் நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

2010ம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதகாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment