Wednesday, May 02, 2012

கழுகின் கண்ணுக்குள் சிக்கிக்கொள்ளப் போகும் சிறீலங்கா



சிறிலங்காவில் முன்னர் பணியாற்றிய இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமான பென்ரகனின் உயர்நிலைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பில் இனத்துவக் கற்கைகளுக்கான அனைத்துலக நிலையத்தின், தெற்காசிய சிறுபான்மையினர் உரிமைகள் என்ற திட்டத்தின் பணிப்பாளராகவும், பின்னர் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் கொழும்பு செய்தியாளராகவும் பணியாற்றிய விக்ரம் சிங் என்பவரே பென்ரகனில் உயர் பதவியைப் பெற்றுள்ளார். 


பென்ரகனில் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

தெற்கு மற்றும் தென்கிழக்காசியா தொடர்பான கொள்கைகளின் அபிவிருத்தி தொடர்பாக மேற்பார்வை செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் சிங், குறிப்பாக அவுஸ்ரேலியா தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடனும், இந்தியா, சிறலங்கா போன்ற தந்திரோபாய நாடுகளுடனான உறவுகள் குறித்தும் கவனம் செலுத்துவார். 

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் இவர் முக்கியமான பாத்திரத்தை வகிப்பார் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கொள்கை விவகாரங்களுக்கான பதில் கீழ்நிலைச் செயலர் ஜேம்ஸ் மில்லர் தெரிவித்துள்ளார். 

கம்போடியாவில் இந்த வாரம் நடைபெறும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க குழுவுக்கு விக்ரம்சிங் தலைமையேற்கவுள்ளார். 

2011 ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் பென்ரகனில் கொள்கைப் பிரிவில் ஆசிய பசுபிக் பாதுகாப்பு விவகார ஆலோசகராக விக்ரம் சிங் பணியாற்றி வந்தார். 

அத்துடன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற போர்கள் பற்றிய உள்ளக மீளாய்வுக் குழுக்களுக்கும் இவர் தலைமையேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment