
பாராளுமன்றத்தில் நேற்றையதினம் புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்..
30 வருட ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
ஐ.நா.பையின் அறிக்கையின் பிரகாரம் இன்னும் 6000 பேரே மீள்குடியேற்றப்பட விருப்பதாகக் கூறப்படுகின்றது. இது உண்மைக்குப் புறம்பானதும் முற்றிலும் தவறானதுமான தகவலாகும். எமது தகவலின்படி இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்படுவதற்காக இன்னும் மூன்று இலட்த்துக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர் என்பதே உண்மையாகும். எமது மக்களுக்கு சொந்தமான காணிகள், விவசாய நிலங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகிவருகின்றன.
எமது கடற்பரப்புகளுக்கு செல்ல எமது மக்கள் மறுக்கப்படுகின்றனர். அதேவேளை, தெற்கிலிருந்து சிங்களவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க வடக்கில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் இராணுவம் நிற்கின்றது. அங்கு புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு பாதுகாப்பாகவும் நிற்கின்றனர். முல்லைத்தீவில் 2500ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு இராணுவக் கட்டமைப்புகளும் இராணுவக் குடியேற்றங்களும் இடம்பெற்றுள்ளன. நந்திக்கடல் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து காட்டுப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மாதகல் பகுதியில் எமது மக்கள் விரட்டப்பட்டு விகாரைகளையும் இராணுவ நிறுவனங்களையும் அமைத்திருக்கின்றனர் இராணுவத்தினர். சிங்களவர்கள் அங்கு சென்று உல்லாசமாக சுகபோகம் அனுபவிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்ற போதிலும் தமது மத உரிமையைப் பாதுகாப்பதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தத்தை திணிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுபான்மை பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றி பௌத்த மதத்தை திணித்து ஆக்கிரமிப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என்பது புலப்படுகின்றது. இவ்வாறு இடம்பெறும் செயற்பாடுகள் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படப்போகின்றதா?
எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கைதானவர்களின் விடுதலைக்கும் அரசியல் தீர்வுக்கும் என அரசாங்கத்துடனான ஒரு வருடகால பேச்சுக்களில் நாம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். எனினும் எதனையாவது அரசாங்கம் நிறைவேற்றியதாக இல்லை. எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வினை எட்டுவதற்கும் என அரசாங்கத்துடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கம் எமது நல்லெண்ணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆயுதப்போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட எமது மக்கள் இன்று ஜனநாயக ரீதியில் எழுந்து நிற்கின்றனர். எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தையும் தமிழ் மக்களுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக கோரிக்கைகளை ஏற்று அரசாங்கம் நியாயமானதோர் அரசியல் தீர்வுக்கும் அதற்கு முன்பதாக எமது மக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இதிலிருந்து அரசாங்கம் தவறும் பட்சத்தில் தந்தை செல்வா காட்டிய வழியில் நாம் எமது மக்களை அணிதிரட்டி சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகும் என்றார்.
No comments:
Post a Comment