Thursday, May 10, 2012

திருக்கேதீஸ்வரம் - திருக்கோணேஸ்வரம் - பௌத்த விஹாரைகள் இடிக்கப்பட்டு அதன்மீதே கட்டப்பட்டுள்ளனவாம்! கூறுகிறார் மேதானந்த தேரர்

  பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டே இந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய் இப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள் இன்று ஏதுமற்றவர்களாக இருக்கின்றனர். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? இலங்கையின் எந்தவொரு பகுதியையும் உங்களின் தாயகம் என்று கூற முடியாது.தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்பவர்கள்.
வடக்கு, கிழக்கில் கோவிலை உடைத்து கட்டப்பட்ட ஒரு பௌத்த விஹாரையை கூற முடியுமா? தமிழர் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது அப்பட்டமான பொய்யாகும். சிங்களவர்களின் பகுதிகள் தான் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட புகழ்பெற்று விளங்கும் அனைத்து இந்து கோயில்களும் பௌத்த விஹாரைகள் இடிக்கப்பட்டு அதன்மீதே கட்டப்பட்டுள்ளன. நாம் இந்து கோயிலை இடித்து அழித்தோமா?
நாம் அனைவரையும் ஒன்றாக மதிக்கின்றோம். இந்து கோயிலை கட்டுவதற்கு நான் கூட நிதியுதவி வழங்கியுள்ளேன். தமிழ் கூட்டமைப்போ பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கின்றது.
ஏறாவூல் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்தே பௌத்த விஹாரையை நிர்மாணித்தனர். தமிழர்களே புத்தர் சிலைகளை தலையில் தூக்கி சென்றனர் என்பதனால் இன, மத, பேதமின்றி சகலரும் ஐக்கியப்பட்டு கைகோர்த்து அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கியப்படுவோம். இது உங்களுடையதும் எங்களுடையதும் நாடாகும் என்பதனால் சகோதரர்கள் போல் செயற்படுவோம் என எல்லாவள மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment