Sunday, May 20, 2012

கனடியக் குடிமகன் கொலையில் தொடரும் மர்மங்கள்: -தமிழீழத்திலிருந்து மருதநிலவன்-


Mahendrarajah-Antonipillaiஅண்மையில் பரந்தன் பகுதியில் வைத்து இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறி கனடியக் குடியுரிமை பெற்றவரான அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா என்பவர் முகமூடி அணிந்த ஆயுததாரியினால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக இலங்கைக்கான கனடியத் தூதுவர் புரூஸ் அவர்கள் இலங்கை அரசுக்கு தன் கண்டனங்களை தெரிவித்ததுடன் உரிய விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் லண்டன் பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் மகேந்திரராஜா இலங்கையில் பிறந்தவர் எனவும், கிளிநொச்சியில் இவரது சொத்துக்களை விடுதலைப்புலிகள் கையகப்படுத்தி வைத்திருந்தனர் எனவும், போரின் பின் அவற்றை வேறு சிலர் ஆக்கிரமித்து விட்டதாகவும், அவற்றைத் திரும்பப் பெறவே அவர் இலங்கைக்கு வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு வந்த பின்பு சொத்துக்களை மீளப்பெற முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அவற்றைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள் திரும்ப ஒப்படைக்க மறுத்ததாகவும் அதன் காரணமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வாய்த்தர்க்கங்களாக விரிவடைந்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் எப்படியும் தனது சொத்துக்களை மீளப் பெறுவதற்காகச் சபதமிட்டதாகவும் அவற்றைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள் முடிந்தால் செய்து பார்க்கும் படி சவால் விட்டதாகவும் கூடத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
எப்படியிருந்த போதும் பரந்தனில் இவர் தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும்இ இவர் வேறு ஒரு வீட்டில் இரவு உணவு முடித்து விட்டு வந்த பின்பு முகமூடி அணிந்த சிலர் இவரின் வீட்டில் புகுந்து இவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொன்றதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொலையாளிகளுடன் இவரும் நீண்ட நேரம் போராடியிருந்தார் எனவும் தெரியவருகிறது.
இவரது தந்தையார் அந்தோனிப்பிள்ளை அவர்கள் ஒரு பகிரங்க வேலைப்பகுதி ஓவசியர் என்பதும் (பி.டபிள்யூ.டி) இவரின் வயல் நிலம் அமைந்துள்ள காணி ஓவசியர் கமம் என அழைக்கப்படுவதும் அந்தச் சந்திக்கு ஓவசியர் சந்தி என்ற பெயர் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் முயற்சியால் இரணைமடுக்குளம் கட்டப்பட்ட காலப்பகுதியில் முதலாம் வாய்க்காலிலிருந்து ஆறாம் வாய்க்கால் வரையுள்ள பகுதிகள் வயல் செய்வதற்காக மத்தியதர வர்க்கத்தினருக்கு வழங்கப்பட்டன. இதில் 2ம் வாய்க்காலில் உள்ள ஆயிரம் ஏக்கர் சேர்.பொன் இராமநாதனுக்கும் வழங்கப்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு அவை விளைநிலங்களாக மாற்றப்பட்டு இரணைமடு மூலம் நீர்ப்பாய்ச்சப்பட்டு நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.
இதே சமயம் கிளிநொச்சி கண்டி வீதியின் இரு மருங்கிலும் இந்த மத்தியதர வர்க்கத்தினருக்கு காணிகள் வழங்கப்பட்டன. காலப்போக்கில் அவர்கள் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டனர். சிலர் கடைகளைத் தாங்களே நடத்தினர்.
தியேட்டர் முருகேசா, எஸ்.வி முருகேசு, பிளாக்கர் பொன்னம்பலம், தியேட்டர் வல்லிபுரம, மில் முருகேசு, வட்டிக்கடை முருகேசர், சரஸ்வதி, கமமுதலாளி அந்தோனிப்பிள்ளை ஓவசியர் போஸ்ற் மாஸ்ரர், குமரகுரு, கந்தையா விதானையார், எஞ்சினியர் சிவசுந்தரம், டொக்டர் ஹன்ற,  சேர் பொன் இராமநாதன், காஞ்சா சகோதரர்கள், அருளப்பு போன்ற பல மத்தியதர வர்க்கத்தினருக்கு கண்டி வீதி அருகில் காணிகள் வழங்கப்பட்டன.
இன்று அவர்களில் பலர் உயிருடன் இல்லை. அவர்களின் வாரிசுகளையும் காணக்கிடைக்கவில்லை. இன்று ஏ9 வீதியின் இருமருங்கிலும் பெரும் தென்னிலங்கை நிறுவனங்களாலும் புதிய புதிய முதலாளிகளாலும் நிரப்பப்பட்டு விட்டன. போர் காலத்தில் இடம்பெயர்ந்தவர்கள் புலம் பெயர்ந்தவர்களின் காணிகள் இப்போது எவர்எவருக்கோ எப்படியோ சொந்தமாக்கப்பட்டு விட்டன. உண்மையான சொந்தக்காரர்களில் சிலர் காணிக் கந்தோருக்கும், பொலிஸ் நிலையத்திற்கும் அலைந்து திரிகின்றனர். போதிய ஆவணங்கள் இல்லையெனக் கூறப்பட்டு அவர்கள் விரட்டியடிக்கப்படும் சம்பவங்களும் உண்டு. ஒருவரின் காணியைப் பிடித்து இன்னொருவர் விற்று விட்டுப் போய்விட காணிக்காரனும் காணியை வாங்கியவனும் சண்டை போடும் நிலைமையும் உண்டு.
அந்தோனிப்பிள்ளை ஓவசியரும் தனக்கு வழங்கப்பட்ட காணியில் ஒரு கடைத்தொகுதியை அமைத்து வாடகைக்கு விட்டிருந்தார். அவர் இறந்த பின்பு அவரது மகன் மகேந்திரராஜா ஒரு அழகான நவீன முறையிலான கட்டிடத்தை அமைத்து அதை வாடகைக்கு விட்டிருந்தார். 1996 இடப்பெயர்வின் போது அக்கட்டிடத்தை இராணுவம் ஆக்கிரமித்திருந்தது. பின்பு 2000 ஆண்டில் இராணுவம் கிளிநொச்சியை விட்டு விரட்டப்பட்ட பின்பு அதை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வந்தனர்.
அக்கட்டிடத்தையும் தகப்பனாரால் கட்டப்பட்ட கடைத்தொகுதியையும் மீளப்பெறும் நோக்குடனேயே அவர் இலங்கைக்கு வந்தார் என்று தெரியவருகின்றது. தற்சமயம் அதில் ஒரு சுப்பர் மாக்கற்றும் சில நிறுவனங்களும் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
எப்படியிருந்த போதும் காணி அவருடையது,  கட்டிடங்கள் அவருக்குரியவை. தற்சமயம் பாவிப்பவர்கள் வெள்ளையடித்து வர்ணம் தீட்டியிருக்கலாம். இவற்றுக்கு அவர் உரிமை கோரி வந்த போது தான் அவர் கொல்லப்பட்டதாக கனடியத் தூதுவரின் கூற்று வெளிப்படுத்துகிறது. ஒரு கொலை மூலம் காணிப் பிளவைத் தீர்க்க முயலும் அராஜகம் இங்கு நிலவுகிறது என்பது தான் இங்கு முக்கியமான விசயம். அது மட்டுமல்ல இப்படியான பெரும்பாலான சம்பவங்களின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை. இதுவரைக் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்களும் தென்படவில்லை.
எப்படியிருந்த போதிலும் காணி சம்பந்தமான பிணக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இதுதான் முதல் தடவையல்ல. ஆனால் இது காணிப்பிணக்கு தொடர்பான முதல் கொலை. எதிர்காலத்தில் இப்படியான கொலைகள் இடம்பெறமாட்டா எனக் கருதி விடவும் முடியாது. ஏற்கனவே காணிப்பிரச்சினைக்கு ஆட்பட்டவர்கள் காணிக்கந்தோருக்கும், பொலிஸ் நிலையத்திற்கும் அலைகின்ற அளவில் நிறுத்தி விட்டனர். அவர்களும் மகேந்திரராஜா போல் வலிமை படைத்தவர்களாக இருந்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முயற்சித்திருந்தால் அவர்களும் கொலையுண்டிருப்பார்களோ எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
கிளிநொச்சியில் மட்டுமன்றி எங்குமே போருக்கு முன்னைய காலத்தில் கூட காணித் தகராறுகள் இருக்கத்தான் செய்தன. எனினும் அவை நீதிமன்றங்கள் மூலம் தீர்க்கப்பட்டன. நீதிமன்றங்கள் இயங்காத நிலை வந்த போது இப்படியான பிரச்சினைகளை விடுதலைப்புலிகளின் இணக்க சபைகள் சுமூகமாகத் தீர்த்து வைத்தன. பின்பு வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது விடுதலைப்புலிகளின் காவல்துறை, நீதிமன்றம் என்பன இப்படியான பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தன. இவ்விரு காலப்பகுதிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் சட்டம் ஒழுங்கு என்பன நிலைநாட்டப்பட்டன.
இப்போது போர் முடிந்து விட்டது. சமாதானம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கொலைகள, கடத்தல்கள், காடைத்தனங்கள் எவற்றுக்குமே பஞ்சமில்லை. நீதியையும் நியாயத்தையும் எங்கே தேடுவது என மக்கள் அங்கலாய்க்கும் நிலை. இப்படியான நிலையில் தான் காணிப்பிணக்குகளும் அவை காரணமாகக் கொலைகளும் இடம்பெறுகின்றன.
காணிகள் தொடர்பான வன்முறைகளுக்கு மூன்று காரணங்களைக் கூற முடியும். ஒன்று காணிகள் சம்பந்தமான விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு. இரண்டாவது இப்படியான பிரச்சினைகளில் அரசியல் வாதிகளினதும் அவர்களின் வால்களினதும் தலையீடு. மூன்றாவது துணை இராணுவக் குழுக்களின் சுதந்திரமான நடமாட்டம்.
ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் படையினருடன் தொடர்புபட்டிருந்தாலோ அல்லது நன்றாக சிங்களம் பேசத் தெரிந்தாலோ உடனடியாக அவர் படையினரிடம் போய் விடுவார். பின்பு அவர் பிடித்து வைத்திருக்கும் காணியின் உரிமையாளரை இராணுவத்தினர் மிரட்டுவார்கள். காணி உரிமையாளர் சில சமயம் புலியின் ஆதரவாளன் எனவும் மிரட்டப்படுவதுண்டு. அவர் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று மெல்ல அந்த விவகாரத்திலிருந்து ஒதுங்கி விடுவார். சிலர் பயத்தில் ஊரை விட்டு ஓடியதுண்டு.
அரசியல்வாதிகளோ அவர்களின் வால்களோ தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் சார்பாகச் செயற்படும் படி அரச அதிகாரிகளை மிரட்டுவார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து நேர்மையாக நடக்க முயன்றால் அவர் கவனிக்க வேண்டிய ஆளாகி விடுவார். வாய்ப்புக் கிட்டும் போது அவருக்கு இயல்பான (?) இடமாற்றம் வரும். சிலவேளைகளில் அவரை விடத் தகுதியும் மூப்பும் குறைந்தவரே அவருக்கு மேலதிகாரியாகவும் நியமிக்கப்படலாம்.
துணை இராணுவக் குழுக்களின் அட்டகாசம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நான்கு மோட்டார் சைக்கிள்கள் வரும். கேற்றில் நின்றவாறு ஒருவர் சொல்வார் ‘பின்னேரத்துக்கை காணியை விட்டு வெளியேறியிட வேணும். இல்லாட்டில் தெரியும் தானே’ அவர்கள் போய் விடுவார்கள். காணிக்காரனும் காணிவேண்டாம் உயிர் மிஞ்சினால் போதும் என்று மெல்ல ஒதுங்கி விடுவார்.
இப்படியாக இந்த மூன்று முனைகளுக்கும் அஞ்சாது நிமிர்ந்து நின்று ஒருவர் தனது உரிமையை நிலை நாட்ட முயன்றால் மகேந்திரராஜாவின் கதி தான்.போருக்குப் பின்னரான காலப்பகுதியில் சமாதானம் நிலவும் வகை இப்படியானால் காணிப்பிணக்குகளில் நீதியைத் தேட முடியுமா?  ொலையைத் தடுக்க முடியுமா?
பாதிக்கப்படுபவன் அதை எதிர்த்து நின்றால் கொல்லப்படுகிறான். சில சமயம் பாதிக்கப்படுபவன் இன்னல்கள் தாங்க முடியாத நிலையில் தானே தற்கொலை செய்து விடவும் வாய்ப்புண்டு. எப்படியிருப்பினும் அதிகார பீடங்களின் அடாவடித்தனங்களே கொலைகளின் மூலகாரணமாகின்றன.
மகேந்திரராஜாவின் கொலைஞர்கள் கண்டு பிடிக்கப்படுகிறார்களோ இல்லையோ இப்படியான சம்பவங்கள் தொடரக் கூடாது என்பதே பொதுமக்களின் அபிலாசை. ஆனால் உண்மையான நேர்மையான சிவில் நிர்வாகம் நிலை நாட்டப்படும் வரை அதை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
கனடா கொடுக்கும் அழுத்தங்கள் கூட வெற்றி பெறுமா என்பது சந்தேகமே?
எப்படியிருப்பினும் மக்கள் அமைதியையும், நிம்மதியையும் , நீதியையும் எதிர்பார்க்கின்றனர். கிடைக்குமா?
-தமிழீழத்திலிருந்து மருதநிலவன்-
source:sankathi


No comments:

Post a Comment