Saturday, May 19, 2012

விடுதலைச் சிறுத்தைகள் விடுதலைப் புலிகளாய் இருந்து களப்பணி ஆற்றுவோம் ! வீரவணக்க நிகழ்வில் தொல்.திருமாவளவன்


 
thiruma-annanமுள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை “சர்வதேச இனப்படுகொலை நாளாக’ அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, சென்னை பெரியார் திடலில் இன்று (18-5-2012) நடைபெற்றது.  மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மேடையில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பதாகைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
மையச் சென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வீரமுத்து வரவேற்புரையாற்றினார்.  கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆற்றலரசு, வன்னிஅரசு, கவுதமசன்னா, பாவலன், பார்வேந்தன், இளஞ்சேகுவேரா, ஆளூர் ஷா நவாஸ், சிபிசந்தர்,  எஸ்.எஸ். பாலாஜி, ஆகியோர் உரையாற்றியபின் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தீர்மானங்களை முன்மொழிந்தார். 
 
1. 2009ஆம் ஆண்டின் முற்பகுதி மே 18 வரை வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இனவெறியர்கள் தமிழினத்திற்கெதிராக நடத்திய இனஅழிப்புப் போரில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் யாவருக்கும் சர்வதேச இனப்படுகொலை நாளான இன்று விடுதலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
 
2. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், போர் முடிந்து விட்டதாகவும் புலிகளை அழித்துவிட்டதாகவும் இராஜபக்சே கும்பல் அறிவித்தாலும், தமிழினத்திற்கு எதிரான ஒடுக்குமுறையை இன்னும் கைவிடவில்லை. இளைஞர்கள், இளம்பெண்கள், ஊடகவியலாளர்கள், கிறித்துவப் பாதிரியார்கள் மற்றும் சிங்கள சனநாயகச் சக்திகள் போன்ற ஏராளமானோரைத் தொடர்ந்து கடத்திச் செல்வதும் படுகொலை செய்வதும் போன்ற கொடுமைகள் நீடித்து வருகின்றன.  அத்துடன், பாலியல் வல்லுறவுகள் போன்ற திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவுகள் திணிக்கப்பட்டு வருகின்றன. சிங்களர் குடியேற்றம், சிங்களர் படைத் தளங்கள், பௌத்த விகார்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் தாயகம் ஆக்கிரமிக்கப்படுவதும் தொடர்கிறது.  இத்தகைய சிங்களப் பௌத்தப் பேரினவாத ஒடுக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தமிழினத்திற்குரிய பாதுகாப்பை வழங்கவும் இந்தியப் பேரரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
 
3. இலங்கைத் தீவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் இனச்சிக்கலுக்கு ஒரே தீர்வு – நிலையான தீர்வு – தமிழீழம் அமைவது மட்டுமே ஆகும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  தமிழக அளவிலும் இந்திய அளவிலும் இயங்கி வருகிற சில அரசியல் கட்சிகள், “சிங்களரின் ஆட்சியில் தமிழர்களுக்கு உரிமைகள்’ என்கிற வகையில் கருத்துக்களைப் பரப்பி வருகின்றன.  அண்மையில், திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை சென்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அதே கருத்தை வெளியிட்டுள்ளது.  இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.  
 
இந்நிலையில், ஈழ மண்ணிலும், உலக நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற ஈழத் தமிழர்களிடையே தமிழீழம் அமைவது தொடர்பாக “பொது வாக்கெடுப்பு’ நடத்திட வேண்டுமென இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளையும் ஐ.நா. பேரவையினையும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
 
4. விடுதலைப் புலிகள் என்ற அய்யத்தின் பேரில், ஏறத்தாழ பனிரெண்டாயிரம் பேர், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், புலிகளின் முன்னணித் தலைவர்களோடு சிறைப்படுத்தப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் கொடூரமான வதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும், படுகொலைகள் செய்யப்படுவதாகவும் ஊடகங்களின் வழியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கொட்டடிச் சிறைகளில் கொடுமைகளுக்குள்ளாகும் அனைவரையும் மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. பேரவைக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
 
மேற்கண்ட 4 தீர்மானங்களையும் முன்மொழிந்தவுடன் அவற்றை நிறைவேற்றும்விதமாக அனைவரும் பலத்த கையொலி எழுப்பினர்.
 
நிறைவாக, தொல். திருமாவளவன் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.  தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவாக கடந்த கால் நூற்றாண்டு காலமாக விடுதலைச்சிறுத்தைகள் உறுதியாகக் களமாடி வருகிறது. ஆனால், தற்போது சிலர் விமர்சிப்பதை ஒரு பொருட்டாகக் கருதாமல், தமிழீழம் என்ற ஒரு தனி நாட்டில் தமிழீழக் கொடி ஏற்றப்படும் வரை விடுதலைச் சிறுத்தைகள் விடுதலைப் புலிகளாய் இருந்து களப்பணி ஆற்றுவோம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை இரா. செல்வம் தொகுத்து வழங்கினார்.  கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்பட விடுதலைச் சிறுத்தைகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 


No comments:

Post a Comment