கொழும்பு: ""தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ராணுவத்தினரை, வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை'' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவம் வெற்றி பெற்றதன் மூன்றாண்டு ஆண்டு விழா, கொழும்பில் நேற்று நடந்தது. இதில், இலங்கை அதிபர்
ராஜபக்ஷே பேசியதாவது: இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டது. ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் செயல்படுவோர், வேறு வழிகள் மூலமாக, இலங்கையில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஒரு சிலர் கோரிக்கை விடுக்கின்றனர் என்பதற்காக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற முடியாது. ராணுவ முகாம்களை அகற்ற முடியாது. ராணுவ முகாம்களை அகற்றுவதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தான சூழல் ஏற்படும். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், நிர்வாக பணிகளில் ராணுவம் தலையிடுவதாக கூறுவது சரியல்ல.
வளர்ச்சிப் பணிகள்: ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுபவர்கள், போர் முடிவடைந்த பின், கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தளவுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பார்க்க வேண்டும். எங்களின் இந்த பணியை, சர்வதேச சமுதாயம் பாராட்ட வேண்டும். எங்களின் பிரச்னையை, நாங்களே தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். எங்களுக்கு உள்ள பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. போரில் நடந்த உரிமை மீறல் பிரச்னைகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளை, செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு ராஜபக்ஷே பேசினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தினரை அகற்ற வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ராஜபக்ஷேயின் இந்த பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை நடத்தப்படும்: இதற்கிடையே, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த அறிக்கையை, ஹிலாரியிடம் அவர் அளித்தார். செய்தியாளர்களிடம் பெரீஸ் கூறுகையில், "போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசாரணை துவங்கியுள்ளது. இதில் ஒரு முடிவுக்கு வருவதற்கு, போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment