Sunday, May 27, 2012

இலங்கைக்குள் நுழைய ஐ.நா குழுவுக்கும் தடையாம்!.


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் குழுவை இலங்கைக்கு அனுமதிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்து ஆராய ஜெனிவாவில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கடந்த 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் பயணம் வரும் ஜுலை மாதம் இடம்பெறும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தை இலங்கை ஏற்கவில்லை என்பதால், இந்தக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில், எந்தவொரு ஐ.நா அதிகாரிகளின் பயணத்தையும் இலங்கை அரசாங்கம் வரவேற்காது என்று இலங்கையின் உயர்மட்ட அரசஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான பயணம் கேள்விக்குறியாக மாறியுள்ளது

No comments:

Post a Comment