அவுஸ்திரேலியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களை
விடுவிக்கும் நடவடிக்கைகளில் அந் நாட்டின் கிரீன் கட்சி இறங்கியுள்ளதுடன்,
இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தொடர்வதற்கும் அக் கட்சி
தீர்மானித்துள்ளது.
அகதி அந்தஸ்து வழங்கப்பட்டும் கூட அவுஸ்திரேலியாவின் பல பாகங்களிலும் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகளை விடுவிக்க அவுஸ்திரேலிய புலனாய்வு சேவையின் தடையே காரணமாக அமைந்துள்ளது.
எனினும் குறித்த அகதிகள், ஏன்? தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக மேன்முறையீடு செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தையும் அவுஸ்திரேலிய புலனாய்வு சேவை மறுத்து வருகிறது.
இதனையடுத்தே அவுஸ்திரேலிய புலனாய்வு சேவையினருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்ய கிரீன் கட்சி தீர்மானித்துள்ளது.
இதுவரை சிறுவர்கள் உட்பட்ட 51 பேர் மேன்முறையீடு செய்யமுடியாதப்படி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரும் அடங்குகிறார்.
தாமோ தமது குடும்பமோ தமிழீழ விடுதலைப்புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை.
போரின் போதே தாம் அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக கூறும் இந்த இலங்கைத் தமிழர் தாம் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment