Monday, May 28, 2012

மகிந்த ராஜபக்சவின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றது – கருணாநிதி வேதனை


karunanithi-200வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் ராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று  ராஜபக்ச சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது என்று கருணாநிதி வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி :- இலங்கைத் தமிழர்களுக்கு “தனித் தமிழ் ஈழம்” அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப்பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி :- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200 நாடுகளில் மனித உரிமை நிலை குறித்த 2011ஆம் ஆண்டுக் கான அறிக்கையை வாஷிங்டன் நகரில் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், 44 பக்கங்களுக்கு இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக, “தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் சிங்கள ராணுவம் மற்றும் அரசு ஆதரவு குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு கொலைகளை நிகழ்த்தி வருகின்றன. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் நோக்கம் கருதி இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என கருதப்படுவோர் துன்புறுத்தப் படுகிறார்கள். ஏராளமானவர்கள் காணாமல் போவது இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. முந்தைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் காணாமல் போயுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் எந்தப் பொறுப்பும் ஏற்கப்படவில்லை.
சிங்கள ராணுவக் கண்காணிப்பில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் துன்பப்படுத்தப்படுகின்றனர். அரசு அதிகாரிகளால் பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவோரில் பலர் விசாரணையின் போது மரணம் அடைந்துள்ளனர். நீதி விசாரணையின்றி ஏராளமான தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
உண்மையான நீதி மறுக்கப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. தமிழர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடுகிறது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது. கருத்து சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை, நடமாடும் சுதந்திரம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. சிறுவர்களை கடத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக இன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது.
மேலும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் ஜான் ரான்கின், இலங்கையில் தமிழர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதுபற்றி இன்று இந்திய ஊடகங்களில் வெளியிட்ட செய்தியில், “ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொடூரங்களை நிகழ்த்துவதாக இலங்கை அரசின் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், பிரிட்டிஷ் தூதர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளன. அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ள இப்படிப்பட்ட கருத்துக்களுக்கிடையே இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே,
வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் ராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது” என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது. இதையெல்லாம் பற்றி விவாதித்து முடிவெடுக்கத்தான் “டெசோ” மாநாட்டினை விரைவிலே கூட்டுவதாக அறிவித்திருக்கிறோம்.


No comments:

Post a Comment