சண்டித்தனத்துடன் கூடிய தனது அதிகார மற்றும் பணச் செல்வாக்கை வைத்து தன் மீதும் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க்
குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட தனது செல்வாக்கை மேற்குலகத்தில் அதிகரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை எடுத்துவருகிறார் மகிந்தா.
ஒக்ஸ்போட்யூனியனில் உரையாற்ற 2010-இல் லண்டன் சென்ற மகிந்தா பாதுகாப்புக் காரணங்கள் உட்பட பல்வேறு நெருக்குதல்கள் காரணங்களினால் உரையாற்றாமலே நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க மகிந்தாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.இந்த விழாவில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு வரும் யூன் 4-ஆம் தேதி லண்டன் வரவுள்ளார் மகிந்தா.
லண்டனிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மகிந்த மீண்டும் லண்டன் வருகிற செயல் தனது செல்வாக்கை பிரித்தானியாவில் அதிகரிக்க உதவும் என்று கருதுகிறார் போலும். மகிந்தாவின் வருகையை அறிந்த ஐரோப்பிய தமிழர்கள் மகிந்தாவின் வருகைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.மகிந்தாவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்தும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கண்டனக் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு வருகின்றன.
இனவாதத்தைப் பற்றி பேச வேண்டாமாம்:
பிரித்தானிய ஏகாதிபத்தியம் சிங்களவரிடம் இலங்கையை கையளித்துவிட்டு சென்ற காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழின சுத்திகரிப்பு வேலைத் திட்டங்கள் இன்றுவரை செயற்பாட்டிலேயே இருக்கிறது. மறைமுகமான சட்டமாகவே சிறிலங்காவில் தமிழின அழிப்பு திட்டம் இருந்து வருகிறது.
சிறிலங்காவில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று கடந்த வாரம் மகிந்தா தெரிவித்தார். தன்னுடைய நாட்டில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற சகல ரீதியிலும் இனவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் சிறிலங்காவில் தன்னுடைய ஆட்சியில் தான் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாகவும்பெருமையாக கூறினார் மகிந்தா. இப்படியான ஒரு காலநிலையில் சமாதானம் மற்றும் சமத்துவத்துடன் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று கூறினார் மகிந்தா.
உரிமைகளைபகிர்ந்தளித்து வாழும் பக்குவம் இல்லாத மகிந்தா போன்ற தலைவர்கள் ஆளும் நாடுகளில் நிச்சயம் இரத்த வெள்ளத்தை தவிர்க்க யாரினாலும் முடியாது. காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்களத் தலைமைகளும் தமிழர்களை அழித்தொழிப்பதிலேயே ஆர்வம் காட்டியது. தமிழர்கள் என்பவர்கள் ஒரு இனம் இல்லை என்பதனை மகிந்தாவினால் மறுக்க முடியுமா?
ஒன்றிற்குமேலான இனத்தவர்கள் உள்ள நாடுகளில் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கினால் தான் குறித்த நாடு அனைத்துத் துறைகளிலும் வளர முடியும். சிறிலங்காவுக்கு இணையான மக்கள் தொகையை கொண்ட பல நாடுகள் அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கி கூட்டாட்சி முறையை பேணுவதினால் மத்திய – மாநில அரசுகளும் திறம்பட அரச கரும வேலைகளை செய்யக் கூடியதாக உள்ளது.
பல அரசுகள் இன்று அரச அதிகார வேலைகளை தனியாரிடம் அளித்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள் திறம்பட செயல்பாடுகளை செய்வதனால் மக்களுக்கு சென்றடையும் சேவைகள் இலகுவாக இருக்கிற காரணத்தினால் அரசுகள் இன்று தனியார் மயப்படுத்தும் முடிவுகளை எடுத்து வருகிறது. இப்படியான கால நிலையில் வாழும் மக்கள் மகிந்தாவின் போதனையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நான்கு மாநிலங்களைக் கொண்ட ஐக்கிய இராஜ்ஜியம் கூட்டாட்சி முறையில்லாத காரணத்தினால் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அயர்லாந்து மக்கள் சுதந்திரத்துக்காக போராடி இன்று அதிக அதிகாரங்களைப் பெற்று ஆட்சி செய்கிறார்கள். இது போன்ற படிப்பினைகளையாவது மகிந்தா அறிந்து பேசினால் நன்றாக இருக்கும்.
மூன்று ஆண்டுகள் போர் ஓய்ந்து இருக்கும் காலத்தில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் போர்க் காலங்களில் அனுபவித்ததிலும் விட அதிகம். மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கிறது. கனடாவிலிருந்து சென்ற கனடியக் குடிமகனுக்குக் கூட சிறிலங்காவில் பாதுகாப்பு இல்லாத நிலையே இன்று நிலவுகிறது. அரசியல், பொருளாதாரம், கல்வி, காணி போன்ற விடயங்களில் தாமே முடிவு எடுக்கும் மக்களாக தமிழர்கள் ஈழத்தில் மலர்ந்தாலே ஒட்டுமொத்த இலங்கைத் தீவு மக்களும் சமாதானமாக வாழ்கிறார்கள் என்று கருத முடியும்.
பதில் சொல்லியே ஆக வேண்டும்:
ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலிய அரசு, நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை பக்கசார்பற்றவர்கள் நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. தண்டனையை குற்றவாளிகளுக்குப் பெற்றுத்தர சிறிலங்கா அரசு தாமதிக்குமேயானால் சர்வதேச சமூகம் விரைந்து சில செயற்பாடுகளை எடுக்கும் என்று சமீபத்தில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்தும் சிறிலங்காவின் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். சிறிலங்காவில் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதுடன், தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும்என்பதையும் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
“இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தெளிவான நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டும். அதுவே, உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த காத்திரமான பங்களிப்பை வழங்கும்…இந்த இலக்கை அடைய சிறிலங்கா அரசாங்கமும் பொதுமக்களும் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று கனடா கேட்டுள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளது கனேடிய அரசு.
எதிர்வரும் 2013-ஆம் ஆண்டில் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டுமென சில மாதங்களுக்கு முன்னர் கனடா வலியுறுத்தியது. சிறிலங்கா விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இடற்கிடையில், கனேடியக் குடிமகனான 53 வயதான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா என்பவர் கிளிநொச்சியில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவருடைய சடலம் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இவருடைய கொலையின் பின்னணியில் சிறிலங்காவின் இராணுவத்தினரே இருந்துள்ளார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கொலையாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது கனேடிய அரசு. சிறிலங்கா ஒரு தோல்வியுற்ற நாடு என்பதனை மேற்குலகம் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உலக நாடுகளை ஏமாற்றவும், தமிழர்களின் அரசியல் தாகத்தைத் தணிக்கவும் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு. போர் ஓய்ந்துவிட்டதாகக் கூறினாலும் மறைமுகமான பல இராணுவ செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக செய்தே வருகிறது சிங்கள அரசு. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற குடிமக்களையே கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றுள்ளது மகிந்தாவின் அரசு. இப்படிப்பட்ட மகிந்தாவை பிரித்தானிய மகாராணியின் விழாவில் பங்கேற்க அழைத்திருப்பது மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:
No comments:
Post a Comment