Friday, May 25, 2012

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேசத்துக்குப் பதிலளிக்க முடியாது! அரசாங்கம் திட்டவட்டம்!


channel4இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் முன் சென்று விளக்கமளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளரும் பிரதியமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
இது தொடர்பில் சர்வதேசம் எமக்கு கடிதம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தது. அவ்வாறே நாமும் கடிதம் மூலம் பதிலளித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தக் குற்றங்களில் இலங்கை ஈடுபடவில்லை என்று அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. இதனையே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் வலியுறுத்தியுள்ளார். அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கான சான்றிதழை சர்வதேசத்திடம் கொடுக்க எவராது முயற்சித்தால் அவர்களின் நோக்கம் தவறானதாகவே இருக்கும் என்றும் பிரதியமைச்சர் யாப்பா மேலும் கூறினார்.
இதேவேளையில், இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை நிராகரிக்கும் வகையில் இந்த நாட்டில் ஆட்சியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் நடந்துகொள்ளவில்லை. சரத் பொன்சேகா விடயத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறே நடந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பறிக்கப்பட்ட, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ‘ஜெனரல்’ பதவிநிலை மீண்டும் வழங்கப்படுவதென்பது சாத்தியப்படாத விடயமே’ என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ‘ஜெனரல் பொன்சேகா’ என்று அழைக்க முடியுமா? என்று ஊடகவியலாளர்கள் சிலர், அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் கீழ் சுமார் 7,500பேருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நன்றாக அறிந்திருப்பார்.
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இதன் பிரகாரமே சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த மன்னிப்பின் மூலம் தேர்தலுக்கான உரிமை தவிர்ந்த அனைத்து உரிமைகளும் சரத் பொன்சேகாவுக்கு கிடைக்கப் பெறுகின்றது. இருப்பினும் இராணுவ நீதிமன்ற தீர்ப்பு விடயத்தில் ஜனாதிபதி ஒருபோதும் தலையிட மாட்டார்.
அதனால், இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட ‘ஜெனரல்’ பதவி மீண்டும் கொடுக்கப்பட வாய்ப்பு இல்லை’ என்று கூறினார்.


No comments:

Post a Comment