Friday, May 25, 2012

வீடில்லை, வேலையில்லை – வன்னியில் வாழ்விழந்த இடம்பெயர்ந்தோர்



சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிறிலங்காவின் வடக்கில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்வு நோக்கி மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தொழில் மற்றும் வீடு என்பன இந்த மக்களின் மிக முக்கிய தேவையாக காணப்படுகின்றது.


சிறிலங்கா அரச படைகளுக்கும், தனித் தமிழ் நாடு கோரிப் போராடிய புலிகள் அமைப்புக்கும் இடையில் 2008 மற்றும் அதற்கு முந்தைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 448,000 வரையான மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போது சிறிலங்காவின் வடக்கு மாகாணத்திலுள்ள தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐ.நா பணியகத்தின் [UN Office for the Coordination of Humanitarian Affairs - OCHA] இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலக்கண்ணி வெடிகள் இன்னமும் அகற்றப்படாத கிராமங்களைச் சேர்ந்த 13,000 வரையான மக்கள் தற்போதும் தற்காலிக முகாங்களில் வாழ்ந்து வருகின்றனர். நிதிப் பற்றாக்குறை நிலவுவதால், இந்நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இன்னமும் பல ஆண்டுகள் தேவைப்படலாம்.
“யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்து விட்டன என்ற உண்மையை நம்புவதற்கு கடினமாக உள்ளது. எமது வாழ்வும் பெருமளவில் மாறிவிட்டது. யுத்த காலப்பகுதியில், அடுத்த நாளுக்கு அல்லது அடுத்த மணித்தியாலத்துக்கு நாம் எவ்வாறு எமது உயிரைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமே எமது பிரதான கவனமாக இருந்தது” என முன்னர் புலிகளின் தளமாகக் காணப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த நிசாந்தன் என்பவர் கூறுகின்றார்.
சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்ட நிசாந்தன், தாக்குதல்கள் மிக உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக, ஆகஸ்ட் 2009ல் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையை எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். 19 வயதில் தனது கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த நிசாந்தன் பின்னர் மீண்டும் 2010ல் தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு வந்த பின்னர் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
“பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போதும் இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது” என யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வரும் பெண்கள் அபிவிருத்தி மையம் என்கின்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் இயக்குனர் சறோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் யுத்தப் பாதிப்புக்குள்ளான வடபகுதியில் உள்ள வேலையற்றோர் தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கிடைக்கப்பெறாவிட்டாலும் கூட, இடம்பெயர்ந்து மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களில் பெரும்பாலானவர்கள் பொருத்தமான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியாது தவிப்பதாக தொடர்புபட்ட துறைசார் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதிய முதலீடின்மை மற்றும் வடக்கில் வாழும் மக்கள் போதியளவு தொழில் சார் திறனைக் கொண்டிராமை ஆகிய இரு முக்கிய காரணிகள் இவ்வாறு வேலையற்றோர் தொகை அதிகம் காணப்படக் காரணமாக உள்ளதாக சிறிலங்காவின் கொள்கைத் திட்டமிடல் நிறுவகத்தின் பொருளியலாளரான அனுஸ்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எவ்வாறான தொழில் வாய்ப்புக்கள் காணப்பட்டாலும் கூட தொழில் சார் திறனைக் கொண்ட தென்பகுதி மக்கள் இந்த வெற்றிடங்களை நிரப்புகின்றனர்.
குறிப்பாக சிறிலங்காவின் வடக்கில் 40,000 வரையான கணவன்மாரை இழந்த பெண்கள் வாழ்வதாகவும் இவர்களை இலக்காகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சிவச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் மானியத்தைக் கொண்டு, இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பியவர்கள் சிலர் குடிசைக் கைத்தொழில் போன்ற சுய பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போதிலும், தற்போதும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்பட வேண்டும் என சிவச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தப் பாதிப்புக்களைச் சந்திக்காது, சிறிலங்காவின் ஏனைய சில அபிவிருத்தியடைந்த மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது வவுனியா மாவட்டத்தின் சராசரி வீட்டு வருமானது அதிகமாகக் காணப்படும் நிலையில், வவுனியாவில் மேற்கொள்ளப்படும் யுத்தத்துக்கு பின்னான மீள்புனரமைப்புத் திட்டங்கள் இவ்வாறான வருமான அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என யாழ்ப்பாணத்தில் செயற்படும் பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தைச் சேர்ந்த முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய பல ஆயிரக்கணக்கான மக்கள் நிரந்த வீட்டுக்காக காத்திருக்கின்றனர். 100,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் தேவைப்படும் நிலையில், மார்ச் மாத ஆரம்பத்தில் 17,000 இற்கும் குறைவான வீடுகள் கட்டப்படுவதாக OCHA தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கமானது 40,000 வரையான வீடுகளைக் கட்டுவதற்கான உடன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், 2012ன் நடுப்பகுதியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்தி வழிமூலம்: IRIN
மொழியாக்கம்: நித்தியபாரதி
http://www.puthinappalakai.com

No comments:

Post a Comment