Monday, May 21, 2012

போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? – இதயச்சந்திரன்



ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது.


கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. ‘இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு’ என்பதனை அமெரிக்கத் தரப்பினரிடம் கூட்டமைப்பினர் உறுதிபடத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு தெளிவானதொரு அரசியல் நிலைப்பாட்டினை முன்வைக்காமல் பின்னடிப்பதாக விமர்சனங்கள் எழுவதை அண்மைக்காலமாகக் காணலாம்.
இருப்பினும் ஸ்டீபன் ராப், றொபேர்ட் ஓ பிளேக், மரியா ஒட்டோரோ போன்ற அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பயண நிகழ்ச்சி நிரலில், நிரந்தரத் தீர்வு குறித்த விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றினை மேற்குலக அணியினர் கொண்டுவந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதாகவே அது அமையுமென அமெரிக்க பிரதிநிதிகள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.
இந்நிலையில், பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமைப் பேரவையை ஆட்டிப்படைக்கும் வல்லரசாளர்கள், சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்று   மேற்கொள்ளப்பட வேண்டுமென்கிற தீர்மானத்தை முன்மொழியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு, பேரவையிலுள்ள 47 நாடுகளில் பெரும்பான்மையானவை ஆதரவு வழங்கும் வாய்ப்புண்டு.
அதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டு மென்கிற தீர்மானத்தை முன்வைத்தால், சீனா. இரஷ்யா மற்றும இந்தியா சார்பு நாடுகள் அதனைப் பலமாக எதிர்க்கும் நிலை தோன்றும். அதற்கான அணிதிரட்டலில், வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிசின் தலைமையில் ஆபிரிக்காவிற்கும் கிழக்கு ஆசியாவிற்கும் பல குழுக்கள் சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
பிரிக்ஸ் (BRICS) எனப்படும் பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்கிற வளர்ச்சியுறும் பொருண்மிய ஆதிக்க நாடுகளின் ஆதரவைக்கொண்டு, மேற்குலகின் வியூகத்தை இலகுவாக உடைத்துவிடலாமென அமைச்சர் டி.யூ.குணசேகரா அண்மையில் தெரிவித்த கருத்து நோக்கப்பட வேண்டிய தொன்றாகும்.
புவிசார் அரசியலில், மாறிவரும் உலக ஒழுங்கு, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களிற்கு சாதகமாக அமைவது போல் தெரியவில்லை.
தேசிய இனப் பிரச்சினையை தமது பிராந்திய, பூகோள நலன்களை அடைவதற்கானஅழுத்தக் கருவியாக இவ் வல்லரசுகள் பயன்படுத்துவதை மனித உரிமைப் பேரவையில் காணலாம். சிரியாவிற் கெதிராக அரபு லீக்கின் துணையோடு, பாதுகாப்புப் பேரவையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டபோது, சீனாவும், இரஷ்யாவும் தமது வீட்டோ என்கிற இராமபாணத்தை ஏவி, அதனை முறியடித்தன.
பேரவையின் 15 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 13 நாடுகள் சிரியாவிற்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தாலும் அத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை விவகாரத்திலும் , இதே விதமான மோதல் நிலைமை வேறு பரிமாணத்தில் காணப்படுகிறது.
இங்கு மேற்குலகம் – இந்தியா என்ற வழுவழுத்த உறவுநிலை, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படுகிறது. இலங்கை மீது மேற்குலகம் அழுத்தம் கொடுக்கும் போது, அதிலிருந்து விடுபட, தன்னாலான உதவிகளைச் செய்ய முடியுமென்கிற செய்தியைக் கூறியவாறு, மகிந்த அரசோடு நெருங்க முயல்கிறது இந்தியா.
இக் கருத்தியலின் அடிப்படையில், சுயாதீன சர்வதேச விசாரணை என்கிற இலங்கை உடனான உறவு முறிவு நிலைப் போக்கினை மேற்குலகம் மேற்கொண்டால், நிச்சயம் அதனை இந்தியா எதிர்க்கும். ஆகவேதான், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டு மென்கிற அழுத்தத்தைக் கொடுக்க, மேற்குலகம் முயற்சிக்கிறதெனலாம். இதனூடாக இலங்கை அரசின் மீது சர்வதேச நெருக்கடியை உருவாக்கி, ஆட்சிமாற்ற மொன்றினை ஏற்படுத்த மேற்குலகம் விரும்புகிறது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவாகியுள்ள கடன் நெருக்கடி, ஏனைய உலக நாடுகளிலும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். ஈரான் மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடை நகர்வால், இலங்கையில் பெற்றோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் கடன் தொகை அதிகரிப்பதால், கடன் பெறும் அளவை 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்குமாறு பாகிஸ்தானுடன் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜீத் நிவாட் கப்ரால்.
தேவையில்லையென்று அடம் பிடித்த, சர்வதேச நாணய நிதியத்தின் எட்டாவது தவணைக் கொடுப்பனவான 800 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தருமாறு கெஞ்சுகிறது இலங்கை அரசு. அத்தோடு யாழ்ப்பாணம் செழிப்புறுகிறது என்று, என்னதான் கண்காட்சிகளை அரசு நடத்தினாலும், மக்கள் மீது செலுத்தப்படும் வரிச்சுமை குறைவடையவில்லை. இதற்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் ஆளுமை இரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்கிற யதார்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்கிறது.
ஆகவே விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட மகிந்த அரசு மீது பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவு பலமாக இருப்பதால், அதே யுத்தத்தை வழிநடத்திய சரத்பொன்சேகாவினால் மட்டுமே, மகிந்தவிற்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுக்க முடியுமென மேற்குலகம் கருதுவதை நோக்கலாம்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தோல்வியுற்ற நிலையில், இரண்டாவது தடவையாக அவரை களமிறக்கும் முயற்சியைத் தவிர வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை. ஆனால், போர்க்குற்ற விசாரணை என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தி, சிறையிலிருக்கும் பொன்சேகாவை வெளியில் கொண்டுவர முடியுமாவென்று முயற்சித்துப் பார்க்கிறது மேற்குலகம். இந்த வியூகத்தை முறியடிப்பதற்காகவே, மன்னிப்புக் கோரினால் விடுதலை செய்வோமென, பல தூதுவர்களை அனோமா பொன்சேகாவிடம் அரசு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
மன்னிப்புக் கேட்டு அடிபணிந்து சென்றால், அதனையே பெரும் பரப்புரையாக  மாற்றி விடலாமென்று மகிந்தர் எண்ணியிருந்தார். ஆனாலும், மன்னிப்புக் கோராமலே, அவரை வெளியில் கொண்டுவரும் வழிவகைகள் எம்மிடம் உண்டென மகிந்த எதிர்ப்பு வல்லரசாளர்கள் சத்தியம் செய்ததால், அத்தகைய சரணடைவுப் பாதையை அனோமா கொம்பனி கைவிட்டு விட்டார்கள் போல் தெரிகிறது.
ஆகவே தமிழ் மக்களைவிட, அனோமா பொன்சேகா குழுவினரே மனிதஉரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்று நம்பலாம். இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது ஓரிரு தினங்கள் பின்பாகவோ சரத்பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால். மேற்குலகின் தீர்மானங்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கைவிடப்படும் சாத்தியப்பாடு உண்டு.

No comments:

Post a Comment