Saturday, May 05, 2012

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா எதையும் செய்யவில்லை – ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு விசனம்


Jean-Lambertநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவில் நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான குழுவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜீன் லம்பேர்ட் தலைமையில் ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

தமது பயணத்தின் முடிவில் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவியான ஜீன் லம்பேர்ட்,
“அபிவிருத்தி வேலைகளில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதும், பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதும் அவசியமானது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், மற்றும் பொறுப்ப்புகூறல் விவகாரங்களில், கடந்த ஓராண்டுக்கு முந்திய நிலையை விட சிறியளவு மாற்றமே ஏற்பட்டுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற விடை காணப்படாத பல கேள்விகள் உள்ளன.  நாம் அவற்றை கிடப்பில் போட்டு வைக்க முடியாது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது தொடர்பான குறிப்பிடத்தக்க எந்த விடயத்தையும் சிறிலங்கா அரசாங்கம் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ், சிங்களம் ஆகிய உள்ளூர் மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு இந்தக்குழு சிறிலங்கா வந்திருந்த போது, நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 600 என்று சிறிலங்கா அரசாங்கம் தகவல் தந்திருந்தது.
இந்த ஆண்டு எத்தனை பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் எமது குழுவுக்குத் தரப்படவில்லை.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தக் குழுவினர் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆகியோரையும் ஐதேக மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment