Tuesday, May 08, 2012

அரசாங்கத்திலே பதவி வகிக்கும் விடுதலைப்புலிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் : பொன்.செல்வராசா.

"விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமெனில், அரசாங்கத்திலே பதவி வகிக்கும் அதே இயக்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்."

மட்டக்களப்பு, தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகத்தின் 38ஆவது ஆண்டு நிறைவு தினத்தையும், சித்திரை புத்தாண்டையும் முன்னிட்டு நடத்திய விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நீங்கிய பின்னர் 300க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டுள்ளனர். அதற்கான பட்டிலை தயாரித்து அரசாங்கத்திடம் பொலிஸாரிடம் கையளித்தாலும் கூட இதுவரை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று அரசாங்கம் எமக்குச் சொல்லியது கிடையாது. இவர்களை ஏறக்குறைய ஐந்தாண்டு காலமாக அந்த இளைஞர்களின் தாய்மார்கள் மனைவிமார்கள் ஒவ்வொரு முகாமாக தேடிவருவதாக நாங்கள் அறிகின்றோம். அவர்களுக்கான பதில் இன்னமும் கிட்டவில்லை. இவ்வாறிருக்கையில், விடுதலைப்புலிகளின் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் என்று திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 220 இளைஞர்களும் யுவதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு, வெலிக்கந்தை முகாமிற்கும், பெண்களை பூந்தோட்டம் முகாமிற்கும் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தாலும், பொலிஸார் கையொப்பமிட்டு அந்த விபரங்களை பெற்றோருக்கு அறிவித்திருந்தாலும் கூட, கைது செய்யப்பட்ட ஆண்கள் பூசா முகாமில் அடைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 35வயதுடைய ஒரு பெண் 7வயது குழந்தையுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த நிலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வருமா என்று இங்கிருக்கின்ற இளைஞர்கள் அஞ்சுகின்றனர். புலிகள் இயக்கத்திலிருந்து இடைவிலகியொர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். என்று கூறினால் அரசாங்கத்திலே பதவி வகித்துக்கொண்டிருக்கின்ற அதே இயக்கத்தைச் சேர்ந்த இன்றைய அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்.
இதை அரசாங்கம் செய்யுமா என்று ஆராய வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் வருகின்ற 10ஆந் திகதிக்குப் பின் இப்படிப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எமது சமுதாயம் எமது இளைஞர்கள் இப்படியான விளையாட்டு விழாவில் கலந்து கொண்டாலும் கூட, சந்தோஷமாக தமது வாழ்க்கையை நடத்தலாமா சந்தோஷமாக இப்படியான விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளலாமா என்று ஆதங்கமுடையவர்களாக இருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் 2009ஆம் ஆண்டிற்குப் பின் உண்மையான சமாதானம் எப்படி ஏற்பட்டிருக்கின்றது அதை உண்மையான சமாதானம் என்று எப்படிக் கூறலாம் என்று வினவ வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். எமக்கு இந்த நாட்டில் உண்மையான சமாதானம் கிடைக்கவில்லை என்று நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம். தமிழர்களின் அபிலாஷைகள் என்று தீர்க்கப்படுகின்றதோ அன்று தான் உண்மையான சமாதானத்தை தமிழன் இந்நாட்டில் அனுபவிக்க முடியும்.
அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்ற சில தமிழ் அரசியல் கட்சிகள் அபிவிருத்தி என்ற போர்வையில் மயங்கிக் கிடக்கின்றார்களே தவிர தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை புரியாத புருஷர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment