Tuesday, June 26, 2012

பயிற்சித்தளம் அமைக்க சன்னார் பகுதியில் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிப்பு


Mannar_Districtமன்னார் மாவட்டத்தின் சன்னார் பகுதியில் படையினருக்கான பயிற்சி தளமொன்றைஅமைப்பதற்கு சுமார் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. காணியை அளவிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன. மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு பெரிய மடு வீதியிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரமளவில் குறித்த நிலம் அமைந்துள்ளது.

மேட்டு நிலப்பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தக் கூடிய இந்நிலப்பகுதியை இராணுவ பயன்பாட்டிற்கு ஒதுக்குவது உள்நோக்கம் கொண்டதென அவதானிகள் கூறுகின்றனர். குறிப்பாக சன்னார் குளத்தை அண்மித்ததாக உள்ள மேட்டு நிலப்பரப்பே இவ்வாறு சுவீகரிக்கப்படுகின்றது. கையகப்படுத்தப்படும் காணிகளுக்கான எல்லையிடும் நடவடிக்கைகளும் மறுபுறத்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மாதிரிக் குடியேற்ற கிராமங்கள் சிலவற்றை இதே சூழலில் அமைப்பதற்கு காடழிக்கும் நடவடிக்கைகள் ? சகிதம் சுத்திகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. எனினும் குறித்த குடியிருப்புத் திட்டம் உள்ளூர் மக்களுக்கானதல்ல எனவும் வெளியிலிருந்து அழைத்து வரப் போவதாக கூறப்படும் கும்பல்களுக்கே வழங்கப்படப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இப்பகுதிகளில் பூர்வீகமாக குடியமர்த்தப்பட்டிருந்த குடும்பங்களுக்கு அதிகாரிகளது அசட்டையீனங் காரணமாக காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை உரிமை கோர முடியாதநிலை தமிழ்க் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் சத்தமின்றி தொடரும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் மௌனம் காக்கப்படுகின்றது. இதற்கு எதிராக குரல் கொடுத்து வந்த மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களையும் குடியேற்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment