Thursday, June 28, 2012

கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு


major_palan_001திருமலைக் கடற்பரப்பில் 28.06.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது, வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்டு, தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது, சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார்.

படையினரின் தடுப்பில் இருந்த இவர் தன்னிடமுள்ள போராட்ட இரகசியங்களைப் படையிரினர் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தனது நாக்கினை பற்களினால் தறித்துக் கொண்டார்.
பின்னர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தன்னை படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலில் தொடர்ச்சியாக  தனது தலையை மோதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இவருடன் பயணித்து படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் விபரம்:
கப்டன் தும்பன் (இளையதம்பி லிங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் மேனகன் (குலவீரசுந்தரம் குலசேகரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உத்தமன் (பொன்னுத்துரை அருமைத்துரை – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுந்தரவதனி (கதிர்காமர் ஜெயவதனி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஆதனா (செல்வரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை ஆபனா (தேவரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம் கிளிநொச்சி)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்து நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
கடற்கரும்புலி மேஜர் பாலன் தொடர்பான பதிவு
எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான்.
அப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
1997 ஆணி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள்.கடமை நிமித்தம் இடம்பெறும் சாதாரண படகு பயணங்கள் போல தான் இதுவும் இருந்தது.
அதுவும் இது ஒரு இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற ஒரு சாதாரண பயணம். பயணத்தின் போது எமது படகு திருகோணமலை துறைமுகத்தை தாண்டி நகரும்போது எதிரியின் கண்காணிப்பில அகப்பட்டுவிடாது அவனது கண்களில் மண்ணைத்துாவி தப்பி வருவதும் உண்டு.
சிலவேளைகளில் அவனது கைகளில் சிக்கி களமுனை ஒன்றை அங்கு திறந்தே மேற்கொண்டு நகரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இன்றும் அப்படி தான் அந்த கண்காணிப்பு எல்லையை தொட்டநேரம் எமது படகு எதிரியின் விசைப்படகின் கண்களுக்குள் அகப்பட்டுவிட, அது அவனது மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி படகு சேதமடைகிறது.
அதில வந்த போராளிகள் கடலில் குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் இந்த பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன். ஒரு நடவடிக்கை நிமித்தம் இவனது நகர்வு அங்கு இடம்பெற்றிருந்தது.
இரவிரவாக நீண்டதூரம் நீந்தி “இறக்ககண்டி” எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான். காட்டிக் கொடுப்புகளால் போராட்டம் பல அழிவுகளை சந்தித்தது போன்றே இங்கும் இவனது கைதும் இடம்பெற்றது.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை. எதிரியிடம் அகப்பட்டு விட்டோம். மேற்கொண்டு அவனது சிந்தனைகள் பலவாறு சுழன்றடித்தது.
என்ன செய்வது,என்னை விசாரணைக்கு உடபடுத்தும் பட்சத்தில் அது நிச்சயம் சித்திரவதையாக இருக்கப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் வெளியேிடப்படாது காப்பாற்றப்பட வேண்டும். என்னை தவிர்த்து இந்த நடவடிக்கைக்கு வேறு ஒருவனாவது பயன்படலாம் அல்லவா. இப்படியாக அவனது சிந்தனைகள் பலவாறு சிந்திக்க தொடங்கியது.
அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான்.தன்னிடம் இருந்து இரகசியங்கள் வெளியேறாது இருப்பதானால் தன்னை தானே அழித்து கொள்ளவேண்டும்.
இங்கு தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான் அவன். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அவன் அந்த அசாதாரணமான முடிவையெடுத்தான்.
“தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான்.
ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில் தான் அவன் அந்த முடிவையெடுத்தான்.
நினைத்தும் பார்க்க முடியாதது அது. “ தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.
ஒரு மோதலுக்குப் பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.) அவனது வீரமரணமும் போராட்ட வரலாற்றில் ஒரு தனி பதிவாக ஆகிப்போனது.

No comments:

Post a Comment