Wednesday, June 06, 2012

இராசபக்சேவை கைது செய்! - சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!

ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்றவாளியுமான இராசபக்சேவை பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநல ஆயநாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றக் கோரியும், இன்று[06-06-12] காலை 10.30 மணிக்கு, சென்னை பிரித்தானிய துணைத் தூதரகத்தின் முன் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. நிகழ்வை, மே பதினெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் தோழர் பாவேந்தன், த.மு.மு.க. பொறுப்பாளர் ஆருண் ரஷீத், நாம் தமிழர் கட்சி இணையதளப் பாசறைப் பொறுப்பாளர் தோழர் பாக்கியராசன், பெ.தி.க. தென் சென்னை மாவட்டச் செயளாலர் தபசிக்குமார், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
“கைது செய்! கைது செய்! இனப்படுகொலை போர்க்குற்றவாளி இராசபக்சேவை கைது செய்” என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், பிரிட்டன் துணைத் தூதரக அலுவலகத்தில் இராசபக்சேவை இங்கிலாந்திலேயே கைது செய்யக் கோரும் விரிவான கோரிக்கை மடல் பொறுப்பாளர்களால் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment