Thursday, June 14, 2012

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களால் நன்மையில்லை: ஐ.தே.க.

2075Mahind_Upset_Wandana-300x242மக்களை சிறைக் கைதிகளாக்கி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்தியுள்ளது. எனவே தான் உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்த போதும் அரசாங்கம் அதன் பயனை மக்களுக்கு வழங்கவில்லையெனக் குற்றம் சாட்டும் ஐ.தே.க. ஜனாதிபதி வெளிநாட்டமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லையென்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஊழல் மோசடிகள், வீண் விரயங்கள் மற்றும் தரக்குறைவான எரிபொருட்கள் கொள்வனவு காரணமாகவே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதே தவிர நாட்டு மக்கள் இதற்கு பொறுப்பானவர்கள் அல்லர்.
இந்த நஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களை சிறைக் கைதிகளாக்கியுள்ளது. உலகச் சந்தையில் இன்று எரிபொருட்களின் விலைகள் பெருமளவில் குறைந்துள்ளது.
ஆனால் அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்காதுள்ளது. அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆறு வாரங்கள் கடந்த பின்னரே இது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என்கிறார்.
உலகச் சந்தை எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது விலைகளை அதிகரிக்கும் அரசாங்கம் விலைகள் குறையும் போது குறைக்காது அதற்கு பல்வேறு காரணங்களை முன் வைக்கின்றது.
வெளிநாட்டு பயணங்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 20 நாடுகளுக்கு தனது பரிவாரங்களுடன் விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.
அதற்காக ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமானத்தை பயன்படுத்தியுள்ளார். இலங்கையில் எந்தவொரு தலைவரும் தனியாக வெளிநாட்டுப் பயணங்களுக்கு விமானங்களை பயன்படுத்தவில்லை. அதேபோன்று வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 15 நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் இப்பயணங்களால் நாட்டுக்கு பொருளாதார ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ நன்மைகள் கிடைக்கவில்லை.
மாறாக ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் ரூபா 24,000 மில்லியன் நஷ்டத்தில் வீழ்ந்துள்ளது. மிஹின் எயாருக்கு ரூபா 16,000 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்கோ, மக்களுக்கோ நன்மைகள் கிடைக்கவில்லை. எனவே உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ளதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும். உடனடியாக விலைகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.
ஊழல் மோசடிகள் வீண் விரயங்களால் ஏற்படும் நஷ்டங்களுக்கு மக்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றார்.

No comments:

Post a Comment