Tuesday, June 12, 2012

மிச்சேல் சிசனின் கருத்து அமெரிக்க கொள்கைகளுக்கு இசைவானது! இலங்கைக்கு அமெரிக்கா பதிலடி!


michele_sisonஇலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து செனற்சபையின் முன்னிலையில் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிச்சேல் சிசன் தெரிவித்த கருத்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இசைவானதாக அமைந்துள்ளது என அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பில் மிச்சேல் சிஸன் தெரிவித்த கருத்துத்
தொடர்பில் சீற்றத்தை வெளிப்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, அவர் தொடர்ந்தும் இத்தகைய கருத்துகளை தெரிவிப்பாரேயானால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிச்சேல் சிசன் தெரிவித்த கருத்துக் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அறிக்கை ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நீண்டகால கொள்கைகளை மிச்சேல் சிசனின் கருத்து மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள படைத்தரப்பினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும், வடபகுதிக்கான மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், தீர்க்கப்படாத மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பான முறையான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் மிச்சேல் சிசன் தெரிவித்திருந்தார்.
மிச்சேல் சிசனின் இக்கருத்துக்கள் அமெரிக்க கொள்கைகளுடன் இணங்கிச் செல்வதாகவும், இலங்கை விவகாரம் தொடர்பில் முன்னைய அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு இசைவானதாகவும் அமைந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை வாசிங்டனில் கடந்த மாதம் சந்தித்த போது இவ்விடயங்களையே வலியுறுத்தியிருந்ததார்.
அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் பரந்தளவிலான ஒத்துழைப்பு அவசியம் என மிச்சேல் சிசன் செனற் சபை முன்னிலையில் ஆற்றிய உரையில் வலியுறுத்தியுள்ளார்’ என இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனிதவுரிமைகள் விவகாரம், பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் மிச்சேல் சிசன் வெளியிட்டுள்ள கருத்துகள்  இலங்கை அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.Posted by sankathinews on June 12th, 2012


No comments:

Post a Comment