Friday, June 01, 2012

இறுதிப் போரில் ஐ.நா. நிறுவனங்கள் செயற்பட்ட விதத்தை ஆராயக் குழு; பான் கீ மூன் அதிரடி நடவடிக்கை


news
 இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறி வதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

 
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்துக்குள் தனது அறிக்கையை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
 
சுயாதீன ஐ.நா. ஆலோசகர்களில் ஒருவரான சாள்ஸ் பெற்றி இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதேசமயம் ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகளான பென் மெட்ஜ் கொடும்னி, லினா சின்ஹா ஆகியோர் இதன் இதர உறுப்பினர்களாவர். 
 
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் செயற்பட்ட ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் ஆக்கபூர்வமான முறையில் செயற் படவில்லையென சர்வதேச மட்டத்தில் பல்வேறு தரப்புக்களில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்தே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குப் பின்னர் இந்தக் குழுவானது, அறிக்கையை சமர்ப்பிக்கும் என  தெரிவிக்கப்பட்டபோதிலும் முக்கியமான விவகாரம் ஒன்றை ஆராய்வதற்கான கால அவகாசம் இந்த குழுவிற்கு இல்லையென சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 
 
இதனால், இந்த குழு தனது இலக்கை சரியான முறையில் அடையுமா என்பது குறித்தும் மேற்படி ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment