மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அண்மையில்
நியமிக்கப்பட்ட சர்ச்சைகுரிய சாமியாருக்கு கர்நாடக நீதிமன்றம் ஒன்று பிணை
வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருக்கு அருகிலுள்ள பிடதியில் நித்தியானந்தா
நடத்தி வரும் ஆசிரமம் ஒன்றில் ஆட்சேபகரமான சில விஷயங்கள் நடைபெற்று
வருகின்றன என்றும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்
கர்நாடக மாநில அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார்.இதனிடையே அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு கன்னடப் பெண்மணி, நித்தியானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்ததை அடுத்து, கன்னட அமைப்புகள் நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுத்தன.
இந்த விஷயம் தொடர்பில் ஊடகத்துறையினருக்கும், நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
இதன் பிறகு நித்தியானநதாவை கைது செய்யவும், அவரது ஆசிரமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.
அதன் பின்னர் அவர் தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில், புதன்கிழமை அவர் ராமநகர அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனார். அவரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி கோமளா, இன்று(வியாழக்கிழமை)அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதனிடையே தனது நற்பெயருக்கு கர்நாடக அரசும், மாநில முதல்வரும் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, முதலவர் சதனாந்த கவுடா தனக்கு பத்து கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என நித்தியானந்தா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment