Tuesday, June 19, 2012

தமிழ்நாட்டை அச்சுறுத்த கேரளாவுடன் கைகோர்க்கிறது சிறிலங்கா


சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.


அவர் கடந்த 12ம் நாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாரூரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார்.

இதன்போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வாழ்த்துக்களை கேரள முதல்வருக்கு பிரசாத் காரியவசம் பரிமாறிக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவுக்கும் கேரளாவுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொச்சியில் வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ‘கேரள எழுச்சி - 2012‘ என்ற வர்த்தக, முதலீட்டு ஊக்கவிப்பு மாநாட்டில் சிறிலங்காவையும் பங்கேற்குமாறும் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா தூதுவருக்கு கேரள உள்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஸ்ணன் இராப்போசன விருந்தளித்து கௌரவித்துள்ளார். இதன்போது கேரள உள்துறை, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் கேரளாவின் காடுகள், வனவிலங்குகள், விளையாட்டு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் கணேஸ் குமாரையும் பிரசாத் காரியவசம் சந்தித்துள்ளார்.

இதன்போது கேரளாவுடன் இணைந்து சிறிலங்காவின் திரைப்படத் தொழிலை விருத்தி செய்வது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிறிலங்கா எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசியல்வாதிகள் கால்வைக்க முடியாத நிலை தோன்றியுள்ள நிலையிலும், சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் இடம்பெறும் நிலையிலும் கேரளா மீது சிறிலங்கா கண்வைத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக சிறிலங்காவுக்கு மிக அருகே உள்ளது கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment