Wednesday, June 27, 2012

உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதி, உரிமைவேண்டி கனடா,அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில் மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல்.

உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு ஞாயிற்று கிழமை, யூலை 22 ஆம் நாள் 2012 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. இந் நினைவு வணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது.

29 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 28 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் நிலத்தை அபகரிப்பதில் மிகவும் மும்முரம் காட்டி வந்தார்கள். அதன் உச்சக்கட்டமாக இப்பொது நடக்கும் நில அபகரிப்பை பார்க்க கூடியதாக இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் தமது இன்னொரு இலக்காக தமிழர் மண்ணை பறிக்கும் முயற்சியில் இறங்கி இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.
ஆனால் இப்போது நிலம் அபகரிக்கும் முயற்சியின் தீவிரம் மிகவும் அச்சத்தை தருவதாக அமைகின்றது. இந்த நில அபகரிப்பு முயற்சியை முறியடிப்பதானது புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு முக்கிய கடமையாக அமைகின்றது. நாம் தொடர்ந்தும் அமைதியாக இருந்தோம் என்றால் பாலஸ்தீனம் போல் தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கருத்து உலகத்தில் உருவாகும் போது, தமிழர்களுக்கு நிலம் இருக்குமோ எமக்கு தெரியாது.
சென்ற வாரம் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெல்லிப்பலையில் ஆரம்பித்த போராட்டத்தில் சிறிலங்கா அரசு தமிழர்கள் மேல் வன்முறையை அவிழ்த்து விட்டது, ஆனால் தமிழர்கள் எதற்கும் பயந்தவர்கள் அல்ல என்று திரு ஸ்ரீதரன் கூறிய கருத்துக்கு அமைய, தமிழீழத்தில் போராடும் மக்களுக்கு பலம் கொடுப்பது போல் புலம் பெயர் தமிழர்கள் நாம் போராடுவோம். 'எமது நிலம் எமக்கு வேண்டும்!!!' என்று தமிழீழ மக்களுடன் சேர்ந்து கனடாவிலும் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு கனடிய தமிழ் மக்களின் ஒத்துழப்பை எதிபார்க்கின்றோம்.
போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும். போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். வாருங்கள், வரலாறாக வாருங்கள். ஒன்றாய் இணைந்து வரலாறு படைப்போம். எங்களுக்காக, எங்கள் சொந்தங்களுக்காக வாருங்கள்.
இடம்:அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில் (Albert Campbell Square - Scarborough Civic Center)
காலம்: யூலை 22, ஞாயிற்று கிழமை
நேரம்:மாலை: 5:00 மணி.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இணையத்தளம்: www.ncctcanada.ca

No comments:

Post a Comment