Wednesday, June 27, 2012

தமிழர் தாயகத்தை சிறிலங்கா அரசு ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. -சுரேஷ் பிரேமச்சந்திரன்-

 இராணுவத்தினர் முகாம்களை அமைப்பதற்கும் பிக்குமார் விகாரைகளை அமைப்பதற்கும் நிலம் இல்லாத நிலையில் தமிழர்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை. இந்த ஆக்கிரமிப்பு சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் இதை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிராக முறிகண்டியில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:
"இன்று தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியர்கள் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்பை நினைவுபடுத்துகின்றது. அங்கு எவ்வாறு பலஸ்தீனியர்கள் துரத்தப்பட்டு, அவர்களின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டனவோ அவ்வாறான ஆக்கிரமிப்பையே இன்று சிங்கள இராணுவமும் செய்து கொண்டிருக்கின்றது.
முல்லைத்தீவில், மன்னாரில், கிளிநொச்சியில் என தமிழரின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவொன்றும் இராணுவத்தினருக்கோ, பௌத்தர்களுக்கோ வேறு இடமில்லாத நிலையில் மேற்கொள்ளப்படவில்லை. இது அரசாங்கத்தினால் நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. வட,கிழக்கு பிரதேசம் தமிழ் மக்களுக்குச் சொந்தமானது தமிழர்கள் தமது மண்ணில் ஜனநாயக சூழலில் வாழ வேண்டும். இன்று இராணுவப் புலனாய்வாளர்கள் எங்கள் சமூகத்துடன் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், ஆள் கடத்தல்கள், ஆட்களை இல்லாமல் செய்தல், கழிவு ஒயில் வீசுவது, அச்சுறுத்துவது என அனைத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கின்றார்கள்.
இது மாற்றப்பட வேண்டும். சுதந்திரமாக பேசவும், எழுதவும், வாழவும் தமது சுயத்தை பேணவும் சுதந்திரமான சூழல் பிறக்க வேண்டும். அதுவரையில் இந்தப் போராட்டம் தொடரும். அடக்கப்பட்ட தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் முஸ்லிம், மலையக மக்கள் தமிழர்கள் இணைந்து போராடுவோம். இன்று நாங்கள் முறிகண்டியில் உடைக்கவுள்ள சிதறுதேங்காய் சிறிலங்கா அரசை சிதறடிப்பதற்காக இருக்க வேண்டும்." என கூறினார்.

No comments:

Post a Comment