Friday, July 13, 2012

தனி ஈழமே தீர்வு - 2200 கி.மீ ஊர்தி பரப்புரையை வெற்றிகரமாக முடித்த இளைஞர்கள்



தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து 07-07 -12 அன்று தொடங்கியது. இதன் முதற்கட்டமாக தோழர்கள் சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர் இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் அவர்கள்.
மேலும் பல இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ், திலீபன் , நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர்.
செல்லுமிடம் எங்கும் , சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆங்காங்கே மனிதர்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் இலங்கை இனப் படுகொலை பற்றிய படங்களை காட்டியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இரண்டாம் நாள் நாடு தழுவிய சுற்றுப் பயணம் விழுப்புரத்தில் இருந்து தொடங்கியது. இது வரை செங்கல்பட்டு, அச்சரபாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம் வரை தோழர்கள் வெகு சிறப்பாக தங்கள் பிரச்சாரத்தை செய்தனர்.
இனப் படுகொலை பற்றி தெரிந்தவர்கள் சிலர், தெரியாதவர்கள் பலர், அவர்களுக்கு இந்த தமிழ் இனப் படுகொலை பற்றிய படங்களும் செய்திகளையும் காட்டி தோழர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நகரப் பேருந்துகளில் ஏறி மக்களுக்கு துண்டறிக்கை விநியோகம் செய்தனர். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு சென்று மக்களை திரட்டி இதைப்பற்றி கூறினர்.
பின்பு அவர்கள் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, பெரம்பலூர், திருச்சி, மேலூர், தொழுதூர், மதுரை, திருமங்கலம் என வழி நெடுகிலும் மக்கள் நெருக்கடியான இடத்தில இனப்படுகொலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என எல்லா தரத்து மக்களிடமும் இந்த பிரச்சினையை பற்றி எடுத்துக் கூறினார். மக்களிடமும் இது குறித்து நல்ல வரவேற்பு இருந்தாக அறிய முடிகின்றது என்று சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் கூறினர்.
நான்காவது நாளாக அயராது ஊர்திப் பரப்புரை செய்து வந்தவர்கள் ராஜபாளையம், தென்காசி, திருநெல்வேலி, சங்கரன்கோவில் போன்ற ஊர்களில் பரப்புரை செய்தனர்.
மாணவர்கள், கடை உரிமையாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என எல்லோரிடத்தும் இந்த இனப்படுகொலை செய்தியை கொண்டு சேர்த்தனர். ராஜபாளையத்தில் ஒரு முகநூல் நண்பர் நம் தோழர்களை வரவேற்று விருந்து உபசரிப்பு செய்ததோடு அன்பளிப்பும் வழங்கினார்.
பின்பு சங்கரன்கோவில் பரப்புரை முடிந்தபிறகு, திருநெல்வேலி, இடிந்தகரை, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற ஊர்களில் சிறப்பாக தோழர்கள் இலங்கை இனப்படுகொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இடிந்தகரையில் அணு உலைப் போராளிகள் திரு உதயகுமார் மற்றும் புஷ்பராயண் அவர்களை சந்தித்து தங்கள் பரப்புரை நோக்கத்தை எடுத்துக் கூறி வாழ்த்துக்கள் பெற்றனர்.
கடைசியாக, ஆறு நாட்களாக தமிழீழமே தீர்வு என தமிழகமெங்கும் நடைபெற்ற ஊர்திப் பயணம் வியாழக் கிழமை ஜூன் 12 ஆம் தேதி நிறைவு பெற்றது. சென்னை மெரீனா கடற்கரையில் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர் சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள்.
இவர்களை வரவேற்று பாராட்டும் விதமாக தமிழக முன்னேற்ற கழக தலைவர் அதியமானும் மற்றும் இன உணர்வாளர்களும் தோழர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் சென்று மீண்டும் சென்னையை நோக்கி வரும் வழியில் பல ஊர்களில் இலங்கையில் நடந்த இனப் படுகொலை பற்றிய விழிப்புணர்வு செய்தனர் நம் தோழர்கள்.
மொத்தம் 2200 கிலோ மீட்டர் அமைந்த இந்த சுற்றுப் பயணத்தை வெற்றி கரமாக நடத்தி முடித்தனர். தன்னலம் பாராது இந்த பயணத்தை மேற்கொண்ட தோழர்கள் அனைவரையும் நாம் வாழ்த்துவோம்.
இவ்வாறு வெற்றிகரமாக தனி ஈழமே தீர்வு என்ற பயணத்தை முடித்த சீனிவாஸ், நாகராஜ் திலீபன் ஆகியவர்களை கருத்துக் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது,
இன்னும் தமிழகத்தில் பல பகுதிகளில் மக்கள் ஈழத்தில் நடந்த இனப் படுகொலைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.
இது போன்ற பல பேர்கள் ஈழப் பிரச்சினை மக்களிடம் எடுத்தச் செல்லவேண்டும். அப்போது தான் தனி ஈழம் ஏன் அவசியம் என்ற கருத்து மக்களிடம் போய் சேரும்.
தொடர்ந்து இது போன்ற பரப்புரையில் ஈடுபடுவோம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலத்திற்கும் இந்த செய்தியை எடுத்துச் செல்வோம் என கூறினர்.

No comments:

Post a Comment