Monday, July 09, 2012

நிர்மலரூபனின் உடலை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில் அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்வோம். - எம்.ஏ. சுமந்திரன் -

சிறைச்சாலையில் அடித்துக் படுகொலைசெய்யப்பட்ட வவுனியா தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் உடலை, அரசாங்கம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுக்கும் விவகாரத்தை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த கணேசன் நிர்மலரூபனின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்றன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த அறிக்கைக்கு, அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்கவில்லை.
எனினும் இது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தன், நிர்மலரூபனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். நிர்மலரூபன் இறந்து ஐந்து நாட்களாகியும் அவரது உடல் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை.
ஒழுங்கானமுறையில் அவரது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது மிகப்பெரிய மனிதஉரிமைமீறல். அரசாங்கம் கூடிய விரைவில் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காது போனால், நிச்சயமாக இந்த விவகாரத்தை அனைத்துலக மட்டத்துக்கு கொண்டு செல்வோம். என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment