Sunday, July 08, 2012

கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் (FeTNA) 26ஆவது தமிழ் விழா ரொறன்ரோ மாநகரில் இடம்பெறும்:

  வட அமெரிக்காவின் மிகப்பெரும் தமிழ் விழாவான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழ் விழா இவ்வாண்டு வெள்ளி விழாக் காண்கிறது. யூலை 7ஆம் நாள் இரண்டாவது நாள் நிகழ்வுகளின் முக்கிய விடயமாக 2013ஆம் ஆண்டின் தமிழ் விழா கனடாவில் ரொறன்ரோ மாநகரில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. முதன்முறையாகக் கனடாவில் நடைபெறப்போகும் தமிழ் விழா என்பதால் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் கனடியத் தமிழர் மத்தியில் இவ் அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பால்டிமோர் மாநகரில் இடம்பெறும் வெள்ளி விழாவைத் தொடர்ந்து 26ஆவது ஆண்டு விழா கனடாவின் ரொறன்ரோ மாநகரில் அடுத்த ஆண்டு இடம்பெறும். 2013ஆம் ஆண்டு யூலைத் திங்கள் 5 மற்றும் 6 ஆம் நாட்களில் சொனி நடுவத்தில் (Sony Centre) தமிழ் விழா 2013 நடைபெறும்.
செம்மொழியாம் தமிழ் மொழியை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற மகாகவியின் கனவுக்கு உயிரூட்டி வரும் புலம்பெயர் தமிழரின் கூட்டு முயற்சியால் இயல், இசை மற்றும் நாடகத் தமிழை உயர்த்திடும், போற்றிடும் விழாவாக இவ்விழா அமைகிறது. வட அமெரிக்கா முழுவதும் அமைந்துள்ள பல தமிழ் அமைப்புக்களின் ஒன்றுபட்ட முயற்சியால் இந் நிகழ்வு வெள்ளிவிழாக் கொண்டாடுகிறது. இவ் அமைப்பின் கனடிய உறுப்பினராக விளங்கும் கனடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress) அடுத்த ஆண்டின் விழாவை கனடாவில் நடத்த எடுத்த பெரு முயற்சியின் பலனாக முதன் முறையாகத் தமிழ் விழா கனடா வருகிறது.
தமிழின் அனைத்துப் பெருமைகளையும் கொண்டாடும் ஒரு விழாவாக விளங்கும் தமிழ் விழா அடுத்த ஆண்டிலும் அதன் தரம் குறையாமலும் அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும் ரொறன்ரோவில் இடம்பெற அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன' எனக் குறிப்பிட்டார் கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பில் இயக்குனராக விளங்கும் திரு. பிரகல் திரு அவர்கள்.
தமிழுக்கும் கனடியத் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமையவிருக்கும் இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் இணைந்துப் பணியாற்ற வேண்டுகிறோம். கனடியத் தமிழருக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தமிழைக் கொண்டாடுவதோடு பல்லின மக்களுக்கும் தமிழர்தம் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கலைகள், அரசியல், அறிவியல், வர்த்தகம் மற்றும் இன்னபல விடயங்களை உணர்த்த இவ்விழா உதவும் என அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
கனடியத் தமிழர் வரலற்றில் ஒரு மைல் கல்லாய் அமையவிருக்கும் தமிழ் விழா 2013 சிறப்புற கனடா மற்றும் வட அமெரிக்கா வாழ்த் தமிழ் உறவுகளின் ஆதரவும் உழைப்பும் மிக அவசியமானது. பங்காளராயும் பணியாளராயும் இணைந்து செயற்படக் கனடியத் தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்ளுவும்.







Back to News   Bookmark and Share Seithy.com

No comments:

Post a Comment