Wednesday, July 25, 2012

வடக்கில் சிங்களக் கிராமங்களில் தான் சிறிலங்காப் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் – கோத்தாபய ராஜபக்ச

வடக்கில் சிறிலங்காப் படையினர் பெண்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,


“வடக்கில் பெண்கள் மீதான சிறிலங்கா படையினரின் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால், வடக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைக்குமாறும் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் கோரியிருந்தார்.

அதையடுத்து நான் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு தகவல்களைத் திரட்டினேன்.

காவல்துறை, மருத்துவமனை மற்றும் பிற தகவல்களைத் திரட்டியதன் அடிப்படையில், அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்று தெரியவந்துள்ளது.

வவுனியாவில் இத்தகைய குற்றச்செயல்கள் மூன்று பதிவாகியுள்ளன. அவை சிறிலங்கா இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களினால், அதுவும் சிங்கள கிராமங்களிலேயே இடம்பெற்றுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினர் மீது அபாண்டமான முறையில் ஊடகங்கள் பழிசுமத்துகின்றன.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்தபின்னர் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை.

குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், அடிப்படையற்றவை.

சிறிலங்கா காவல்துறையில், 2011ம் ஆண்டில் 54,521 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. எனினும் இந்த ஆண்டில் இதுவரை 30,328 குற்றச்செயல்கள் தான் பதிவாகியுள்ளன.

1990ம் ஆண்டு 48,264 குற்றச் சம்பவங்களும் 2006ம் ஆண்டு 60,161 குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளன.

1993, 1994 ம் ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்பட்டதுடன் 2009 ம் ஆண்டு அது 13.7 வீதமாக குறைந்திருந்தது.

குற்றச்செயல்கள் குறைந்தும் அதிகரித்தும் வருகின்ற போதிலும் மக்கள் தொகை அதிகரித்துச் செல்வதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.

எனினும், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எனக்கு தந்த 1990 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரையிலான புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, குற்றசெயல்கள் வெகுவாக குறைந்துள்ளதை காண முடிகின்றது.“ என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குற்றச்செயல்கள் அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ள அவர், அவசரகாலசட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாகவும் முரண்பாடான தகவலை வெளியிட்டுள்ளார்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடியளவுக்கு சிறிலங்கா இராணுவத்துக்கு போதிய அதிகாரங்கள் இல்லாததே, பல பிரச்சனைகளுக்கு காரணம் என்ற தொனியிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment