உலகத் தமிழர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட பின்புதான் டெசோ மாநாட்டை நடத்த வேண்டும் என்று, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு அவர் பேசியது:
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு இலங்கை அரசும், மத்திய அரசும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்த திமுகவும்தான் பொறுப்பேற்க
வேண்டும். இவற்றையெல்லாம் மறைப்பதற்காக டெசோ மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகிறார். முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் ஒரேநாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இக்கட்டான நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உதவாத கருணாநிதி இப்போது டெசோ மாநாடு நடத்துவது ஏன்?
உலகத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்த வேண்டும். இம் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து தமிழர் தலைவர்கள் வருவதாக தகவல்களை கருணாநிதி வெளியிட்டு வருகிறார்.முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது கருணாநிதி நாடகம் நடத்தியபோது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை. விரைவில் தமிழீழ நாடு உருவாகும் என்றார்.
நிகழ்ச்சியில் கவிஞர் காசியானந்தன், தமிழர் உரிமை முன்னணி ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் கா.பரந்தாமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment