Saturday, July 07, 2012

உலகில் எங்குமே இல்லாத கொடூரம் இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் காட்டம்

22TH_EDPAGE_SKETCH_962688eஇறந்த தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் சடலம் கூட நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் அரசு, பிள்ளையை இழந்து துடிக்கும் பெற்றோருக்குத் தமது மகனின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற் கும் இடமளிக்க மறுக்கின்றது.
 உலகில் வேறெந்த நாடுகளிலும் நடைபெறாத அவலநிலைதான் நமது நாட்டில் நடைபெறுகின்றதென மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு தெரிவித்தது. உலக நாடுகளிலுள்ள அரசியல் கைதிகளுக்கென சில சிறப்புரிமைகள் இருக்கின்றன.
ஆனால், நமது நாட்டில் மட்டும்  அவை மறுக்கப்படுகின்றன. நிமலரூபனின் மரணத்திற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்  என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண தெரிவித்தார்.
கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளாலும் விசேட அதிரடிப் படையினராலும் அச்சிறையில் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான நிமலரூபன் உயிரிழந்துள்ளார். இறந்த உடலை அவரின் பெற்றோரிடம் கையளிப்பதற்கு அரசு மறுக்கின்றது.
இறந்த தமது மகனின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பெற்றோர் பொலிஸாரின் பின்னால் அலைந்து திரிகின்றனர். இறந்த ஒருவரின் சடலத்தை அவரின் சொந்த மண்ணில் புதைப்பதற்குக்கூட இந்த அரசு அனுமதி மறுக்கின்றது. மகனை இழந்து துன்பத்தில்  வாடும் பெற்றோர்க்கு இது பெரும் துயராக உள்ளது.
நிமலரூபனின் உடலை எங்கு புதைக்கவேண்டும் என்பதை அரசே தீர்மானிக்கின்றது. அரச அதிகாரிகளால் தாக்கப்பட்டவரின் சடலத்தைத் தமக்குத் தேவையான இடத்தில் புதைப்பதற்கு அது திட்டமிடுகின்றது. உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் நடைபெறாத ஒரு சம்பவம் நமது நாட்டில் நடக்கின்றது. இந்நிலை நீடித்தால் நிமலரூபன் போன்று இன்னும் எத்தனையோ பேர் உருவாக்கப்படுவார்கள்.
கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட கைதியைத் தாக்குவது உலகில் வேறெந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றாகும். 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் பின்னர் இப்படி ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெறுமாயின் அது நமது நாட்டில் மாபெரும் ஓர் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது என்றார்.
பிரியதர்ஷினி ஆரியரத்ன
இதன்போது கருத்துத் தெரிவித்த சிவில் கண்காணிப்புக்குழுவின் செயலாளர் கூறியவை வருமாறு:
வவுனியா சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளாலும், விசேட அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டனர். இதற்கு முன்னர் சிங்கள மக்களால் தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டனர். சிங்கள அரசியல் கைதிகளால் தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டனர். தற்போது சிறைச்சாலை அதிகாரிகளாலும், விசேட அதிரடிப்படையினராலும் தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
நமது நாட்டில் சிங்கள மக்களைத் தவிர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழமுடியாதுள்ளனர். இவர்களுக்கு அரசு வழங்கும் பாதுகாப்புத்தான் என்ன? இதனை அரசு உறுதிப்படுத்தவேண்டும்  என்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வழக்கறிஞர் குணரத்ன கூறியவை வருமாறு:
நிமலரூபனைத் தாக்கிக் கொன்றது மட்டுமல்லாமல், அவரது உடலைப் புதைப்பதற்கும் அவர்களின் பெற்றோர்க்கு அனுமதியளிக்க அரசு மறுக்கின்றது. எந்தவொரு கைதியையும் தாக்கும் உரிமை அரசுக்கு இல்லை.
சிறையிலுள்ள கைதிகளை அவர் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் பார்க்கவும், ஆலோசனைகளை வழங்கவும் முடியும். ஆனால், தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் கட சென்று பார்வையிட முடியவில்லை.
அதுமட்டுமல்லாது, நிமலரூபனின் பெற்றோரைக்கூட எம்மால் சென்று பார்க்கமுடியவில்லை. ஏனெனில், அவர்கள் செல்லுமிடமெல்லாம் பொலிஸார் பக்கத்திலேயே நிற்கின்றனர்.
அவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்வதற்குப் பொலிஸார் இடமளிக்க மறுக்கின்றனர். அத்துடன் தமது மகனின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக அவரது சடலத்தைக் கேட்டு அரசிடம் மன்றாடும் பெற்றோரிடம் நிமலரூபனின் சடலத்தைக் கையளிக்கவும் அரசு மறுக்கின்றது. இது மிகவும் வேதனைக்குரியதொரு விடயமாகும் என்றார்.

No comments:

Post a Comment