Friday, July 06, 2012

சென்னையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி: முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்

தமிழகத்தில் இலங்கை விமானப் படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று (ஜுலை 5) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; இலங்கை இனக் கலவரத்தில் இடம் பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில், இலங்கை விமானப் படை வீரர்கள் 9 பேர் சென்னையிலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாத கால தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போன்று அமைந்துள்ளது.

மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான, தமிழ் இனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று சிங்களர்களுக்கு சமமான உரிமைகள் பெறும் வரை பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது வாய்மூடி மௌனியாக உள்ள மத்திய அரசு, இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகும். இலங்கை இனப் போரில் பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டைச் சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கு இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு இலங்கை விமானப் படை வீரர்களை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
source:Makkalmurasu

No comments:

Post a Comment