Thursday, August 02, 2012

இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடவே டெசோ மாநாடு!- கருணாநிதி

karunaanithiஇலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், துயரங்களுக்கும் மருந்து போடவே டெசோ மாநாடு நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.  இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறும் டெசோ மாநாட்டின் ஒரு பகுதியாக அன்று காலை 10 மணியளவில் என் (கருணாநிதி)  தலைமையில் ஆய்வரங்கம் நடைபெறுகிறது.
அன்று மாலையில் நடைபெற உள்ள பொதுமாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் கோரிக்கைகள், வேண்டுகோள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வரங்கில் கலந்து பேசி தீர்மானிக்கப்படும்.

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார், மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சமாஜவாதி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் ஆகியோரும், இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சியைச் சேர்ந்தோரும் அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறும் பொது மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான வீரமணி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். எப்படியும் மாநாட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
டெசோ மாநாட்டில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டும், இடம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உயர்த்துவதற்கும் ஜனநாயக உரிமைகளோடும கண்ணியத்துடன் அவர்கள் வாழ்வதற்கும் இந்திய அரசு எந்த வகையில் உதவிட முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
ஐ.நா.சபை போன்ற சர்வதேச நிறுவனங்களின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் இந்த மாநாட்டில் முடிவு செய்யப்படும்.
இந்த மாநாடு தொடர்பாக பல விமர்சனங்கள் வந்தாலும் நம் கடன் தமிழர்க்கு பணி செய்து கிடப்பதே என்று திமுகவால் முடிந்தவரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
இலங்கை யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுவதற்காகத்தான் டெசோ மாநாடு நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment