“இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குவது குறித்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-அமைச்சர் உமாபாரதி இராமேஸ்வரத்தில் வைத்து தெரிவித்திருக்கின்றார்.
இராமேஸ்வரம் வந்த உமா பாரதி, அக்னி தீர்த்த கடல் மற்றும் 22 புனித தீர்த்தங்களிலும் அவர் புனித நீராடினார். அதன்பின் அவர் கொண்டு வந்த கங்கை தீர்த்தத்தை அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“கங்கோத்திரியில் இருந்து புனித கங்கை தீர்த்தம் எடுத்து வந்து இராமேசுவரம் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்தேன். நாடு வளம் பெறவும், வலிமை அடையவும், பெண்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பிரார்த்தனை செய்து கொண்டேன்.
இராமேசுவரத்தை புனித நகரமாக அறிவிக்க வேண்டும். இராமேசுவரம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு அரசு மட்டுமல்லாது பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ராமசேது பாலம் அழிக்கப்பட்டு சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் 20 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குவது கண்டனத்துக்கு உரியது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒரு உயிரை பாதுகாக்கக்கூட பெரும் முயற்சி மேற்கொள்வார்கள். ஆனால் நமது நாட்டில் அதுபோன்ற நிலை இல்லை. அருகாமையில் உள்ள நாடுகளோடு உறவாக இருக்கவேண்டும். ஆனால் இருநாடுகளும் சட்டத்தை மதிக்கவேண்டும். சட்டத்தை மீறி, ஒப்பந்தத்தை மீறி செயல்படும் நாடுகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குவது குறித்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
No comments:
Post a Comment