Friday, August 24, 2012

அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி சீன நிதியுதவியில்; இலங்கை அரசு தீர்மானம்

chinaஇலங்கை சீனாவின் பக்கம் சாயும் போக்கைக் கடைப்பிடிப்பதால் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படும் இவ்வேளையில், சீனாவின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணியின் கீழ் துறைமுகத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் சீன வங்கியொன்றின் உதவியுடன் பூர்த்திசெய்யப்பட்டமை தெரிந்ததே.
இந்த நிலையில், துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக சீன எக்சிம் வங்கி 600 மில்லியன் டொலரையும், சீன அரசு சலுகைக் கடனாக ஒரு மில்லியன் யுவான்களையும் வழங்கவுள்ளன.
மேற்படி கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்ததும் அது கொள்கலன்களை ஏற்றியிறக்க தெற்காசியாவின் முக்கிய கேந்திர நிலையமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை, மாத்தறை  கதிர்காமம் புகையிரதப் பாதையில் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையான பகுதியைப் புனரமைப்பு செய்வதற்கும் சீனா நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கான முழுத் தொகையான அமெரிக்க டொலர் 278.2 மில்லியனில் சீன எக்சிம் வங்கி 200 மில்லியன் டொலர்களையும், அரசின் சலுகைக்கடனாக 508 மில்லியன் யுவான்களும் கிடைக்கப்பெறவுள்ளன. இந்தக் கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment