கிழக்கு
மாகாணசபைத் தேர்தலில் வன்முறைகள் தலைதூக்குவதைத் தடுப்பதற்கு அரசு
தன்னாலான அனைத்துவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அமைச்சரவைப்
பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக் களத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வன்முறைகள் ஏற்படாமல்
இருப்பது தொடர் பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர்
தெரிவித்துள்ளார் என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டி இது தொடர்பில் அரசு
எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்னவென்றும், அரசின் பங்காளிக்கட்சியான
மு.காவுக்கும், கிழக்கில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்படுகின்றனவே என்றும் ஊடகவியலாளர்
ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும்
அரசு தன்னாலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது எனவும்
குறிப்பிட்டார்.
அதேவேளை, தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது அரச வளங்கள்
பயன்படுத்தப்படுகின்றன என எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில்
எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவை தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்விடயத்தில் ஜனாதிபதியும் கவனம் செலுத்தியுள்ளார் என்றார் அமைச்சர்.
இதற்கிடையில் கொழும்பு தேசிய நூதனசாலையில் பெறுமதியான பொருட்கள்
களவாடப்பட்டதன் பின்னணியில் அரசியல் உள்ளது என ஹெல உறுமய தெரிவித்துள்ள
கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு, ”அரசியல் பின்னணி இல்லை
என்று நான் நம்புகின்றேன். மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல்
இருக்கும்வண்ணம் அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதேவேளை, குறித்த
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதுடன், பொருட்களும்
மீளப் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment