Thursday, August 23, 2012

தமிழ் மக்களுக்கு நெருக்கடி இன்னமும் குறையவில்லை; அகாஷியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

tna1அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசின் இழுத்தடிப்பு போக்கு குறித்து ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் நேற்று விளக்கமளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு உட்பட தமிழர் தாயகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளது.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்   கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய விடயங்களை தாம் தமது நாட்டு பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்வார் என்று யசூஷி அகாஷி கூட்டமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
நான்கு நாள்கள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் அரசின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூஷி அகாஷி நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுமந்திரன் செல்வம் அடைக்கலநாதன் ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் நேற்றிரவு “சுடர் ஒளி’யிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி. கூறியவை வருமாறு:
வடக்கு கிழக்கை இராணுவமயமாக்குவதற்கு இலங்கை அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள், நில அபகரிப்பு மற்றும் மக்களின் காணிகளை இராணுவம்   ஆக்கிரமித்துள்ளதால் மீள்குடியேற்ற நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம் ஆகியவை குறித்து நாம் ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் சுட்டிக்காட்டினோம்.
அத்துடன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கான காரணங்களை மிகவும் தெளிவான முறையில் அவரிடம் விளக்கியதுடன், தீர்வு விடயத்தில் இலங்கை அரசின் இழுத்தடிப்பு போக்கு குறித்தும் விவரித்தோம்.
எமது பிரச்சினைகள் என்னவென்பது தெளிவாக புரிகின்றது எனத் தெரிவித்த ஜப்பானின் விசேட தூதுவர் அகாஷி,  இந்த விடயங்களை தமது நாட்டு ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்வார் எனவும் தெரிவித்தார் என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்கம் செய்வது தொடர்பிலான இலங்கை அரசின் தேசிய செயற்றிட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை யசூஷி அகாஷி கேட்டறிந்துள்ளார் என அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment