Monday, August 06, 2012

தமிழாகரர் தெ.முருகசாமி

 
 

வளாகம் என்பதற்குப் பொதுவாக "இடம்' என்பதுதான் பொருள். செட்டிநாட்டில் வீட்டின் உட்புற இடத்தை "வளவு' என்றே இன்று வழங்குகின்றனர். ஆக பண்டங்கள் குவிக்கப்பட்ட இடம் வணிக வளாகம் எனப் பெயராவதில் தவறில்லை. இக் குறிப்புப்படவே பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் ""வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகு'' என்கிறார் (193). பண்டங்களின் பல்வேறு குவியல் அல்லது குவிப்பாகிய இடம் - வளாகம்.அந்நாளில் அரசனின் அரண்மனை - கோயில் எனப்பட்டது. காலப்போக்கில் கடவுள் உறைவிடத்திற்கும் கோயில் எனவழங்கப்பட்டதைப் போலப் பொது இடமான வளாகம், புலம் வென்ற ஞானிகள் கூடும் இடத்திற்கும் பெயரானது.மேலும், மொழிப்புணர்ப்பில் மகர ஈற்றுச் சொல்லின் புணர்ப்பின்படி வளம்+அகம்=வளாகம் ஆகும். அகம்-இடம், வளங்கள் கொட்டிக் குவிக்கப்பட்ட இடம் என்பது கருத்து.மகர ஈற்றுப் பெயர்ச்சொல் வேற்றுமையில் நிலைமொழி மகரம் கெட, வந்த வல்லெழுத்து மிகும் என்ற கருத்துக்கு மேலும் இரண்டு இலக்கண முடிவுகள் கூறும்போது,""அகர ஆகாரம் வரூஉம் காலைஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே''எனத் தொல்காப்பியர் எழுத்ததிகாரப் புள்ளிமயங்கியலில் (14) கூறியபடி வளம்+அகம்=வளாகம் ஆகும். வளம் - மகரம் கெட்டு வள என்றாகி, அது வளா என நீளும். அகர முதல் எழுத்தான வருமொழியின்போது வருமொழி அகரம் - தொகுத்தல் விகாரமாய் மறைந்துவிட வளாகம் என்ற சொல் இயல்பாக வரும். இதுபோலவே தடாகம் (குளம்) என்ற சொல்லும் ஆகும். தடம்+அகம்-தடாகம். ஆக, வளாகம் என்பது பல்வேறு குவியல் குவிப்பாகிய இடம் எனலாம்.

No comments:

Post a Comment