Monday, August 06, 2012

நவனீதம்பிள்ளையிடம் அடிபணிந்தது சிறிலங்கா

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிபுணர்கள் குழு அடுத்தமாதம் கொழும்பு வரவுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்கக் கோரி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் குழுவை வரவேற்பதாக பதிலளித்துள்ளது
.

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சிறிலங்கா அரசாங்கம், ஜெனிவா தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐ.நா நிபுணர்கள் எவரையும் சிறிலங்காவில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிவந்தது.

எனினும், தற்போது சிறிலங்கா அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிபுணர்களை கொழும்புக்குள் அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுடன் முழுமையாக ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதையே காட்டுகிறது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் அடிப்படையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த நவம்பர் முதலாம் நாள் நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்காக, சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கையிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment