Sunday, August 12, 2012

"எமது உறவுகள் கொல்லப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் என்மீது அக்கறைப்படுவது வேடிக்கையானது" - சிவந்தன்


seithy.com gallery news இருபத்தியொரு நாட்களாக உண்ணாநிலைப்போராட்டதை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களை போராட்டத்தை நிறுத்துமாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அறிக்கை மூலம் கேட்டிருந்ததாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக "புதிய தலைமுறை" தொலைக்காட்சியின் செய்தியாளர் சக்தி கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே திரு. சிவந்தன்
மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். நேற்று திரு. சிவந்தன் உண்ணாநிலைப்போரட்டத்தை மேற்கொண்டுவரும் கூடாரத்துக்கு வந்த "புதிய தலைமுறை" தொலைக்காட்சியினர் அவரது விரிவான நேர்காணலை ஒளிப்பதிவு செய்தனர்.



ரெசோ மாநாடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாகவும், இம்மாநாட்டின் மூலம் தமிழ் ஈழம் அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த திரு. சிவந்தன், "ரெசோ மாநாட்டில் எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தபோதிலும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கருத்தும் இதுவாகத்தானிருக்கும் என நம்புகிறேன்.
எங்களது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது, அவர்களது பரிதாபநிலையைப்பார்த்த பின்பும் ஒரு முடிவினை எடுக்கமுடியாத கலைஞர் கருணாநிதி அவர்கள், தற்போது எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டத்தினை பெற்றுத்தருவதாகக் கூறுவதும், ஈழத்திற்கான பிரேரணை கொண்டுவருவதும் தமிழ்மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தோற்றுவித்துள்ளது. எங்களை ஏமாற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டமாகவே நான் இதனைப் பார்கிறேன. இது ஈழத்தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை� எனத் தெரிவித்தார்.

ரெசோ மாநாடு நடைபெற்றாலும் அதில் தனி(தமிழ்) ஈழம் என்ற சொல் உபயோகப்படுத்தக் கூடாது என இந்தி வெளியுறவுத்துறைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கைபற்றியும் திரு. சிவந்தனிடம் கேட்கப்பட்டது. "ரெசோ என்றால் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு என்று கூறினார்கள், ஆனால் அங்கு தமிழீழம் பற்றி பேசக்கூடாது என்றால் எப்படி? ஈழத் தமிழ் மக்கள் தமிழீழம் என்பதனையே தமது இறுதி இலட்சியமாக கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழப்போகிறார்களா இல்லையா என்பதனை அவர்களே முடிவு செய்யவேண்டும். இந்நிலையில் ஈழத்திற்கான மாநாட்டில் ஈழம் பற்றி பேசக் கூடாது என்பது கேலிக் கூத்தாகவே அமைகிறது� என்றார்.
திட்டமிட்டிருந்தபடி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிருந்து திரு. சிவந்தன் அமர்ந்துள்ள ஸ்ரற்போர்ட் இலகு தொடருந்து நிலைய அருகாமையில் (Stratford High Street DLR, London E15 2SP) மக்கள் கூடவிருக்கிறார்கள். மாலை 5.30 மணிக்கு உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்வதுடன், ஆரம்பநாள் நிகழ்ச்சியின்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அதே இடத்தில் Aspen Way, London E14 5ST (Billingsgate மீன் அங்காடிக்கு எதிரில்) மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதிநாள் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பேருந்துகள் மூலமும் வாகனங்கள் மூலமும் வருவதற்கான ஏற்பாடுகள் அந்தந்த நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.
இப்போராட்டத்தினை வெற்றிப்பெறச் செய்யவதற்காக மக்களை பெருமளவில் வந்து கலந்து கொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்பு குழு �பிரித்தானியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment